இந்தியா

புதிய ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்பு: விழாவை புறக்கணிக்க ஜெகன்மோகன் முடிவு

செய்திப்பிரிவு

புதிய ஆந்திரப் பிரதேச மாநில (தெலங்கானா மாநிலம் தவிர்த்த பகுதி) முதல்வராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்கவுள்ளார்.

மிகவும் ஆடம்பரமாக நடத்தப்படும் இந்த விழாவை புறக்கணிக்கப்போவதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேச மாநிலம் பிரிக்கப்பட்டு தெலங்கானா தனி மாநிலம் கடந்த 2-ம் தேதி அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. அதே நாளில் தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் முதல்வராக பதவியேற்றார்.

இந்நிலையில், தெலங்கானா தவிர்த்த பகுதிகள் அடங்கிய ஆந்திரப் பிரதேச மாநில முதல்வராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்கவுள்ளார். விஜயவாடாவிற்கும், குண்டூ ரூக்கும் இடையே உள்ள நாகார்ஜுனா நகரில் மாலை 7.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு, நிர்மலா சீதாராமன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

ஜெகன்மோகன் புறக்கணிப்பு

பதவியேற்பு விழாவை புறக்கணிக்கப்போவதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: “மாநிலத் தலைநகரை உருவாக்குவதற்காக நன்கொடைகளைத் தருமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ள சந்திரபாபு நாயுடு, தனது பதவியேற்பு விழாவுக்கு ரூ. 30 கோடி செலவு செய்துள்ளார். மாநிலத்திற்கு நிதி உதவி தேவைப்படும் இத்தருணத்தில், இதுபோன்று ஆடம்பரமான முறையில் பதவியேற்பு விழாவை நடத்துவது சரியாகப்படவில்லை. இந்த வீண் செலவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, பதவியேற்பு விழாவில் பங்கேற்கமாட்டேன்” என்றார்.

SCROLL FOR NEXT