காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி | கோப்புப்படம் 
இந்தியா

நீட் தேர்வை ஒத்திவையுங்கள்; மாணவர்களுக்கு சுதந்திரமான வாய்ப்பு கொடுங்கள்: ராகுல் காந்தி

ஏஎன்ஐ

நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும். மாணவர்களின் வேதனையை அறியாமல் மத்திய அரசு பார்வையற்றதாக இருக்கிறது என்று காங்கிஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு வரும் 12-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இம்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுதுவதால், நீட் தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு, நீட் தேர்வு விவகாரத்தில் தலையிட மறுத்துவிட்டது. தேதியை மாற்றி அமைத்தால் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி மறுத்துவிட்டது. ஆண்டுதோறும் 16 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதும்போது சில மாணவர்களுக்காகத் தேதியைத் தள்ளிவைக்க முடியாது எனத் தெரிவித்துவிட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நீட் தேர்வைத் தள்ளிவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ட்விட்டரில் அவர் பதிவிட்ட கருத்தில், “மாணவர்களின் வேதனையை அறியாமல் மத்திய அரசு பார்வையற்றதாக இருக்கிறது. நீட் தேர்வை ஒத்திவையுங்கள். மாணவர்களுக்கு சுதந்திரமான வாய்ப்பை வழங்கிடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நாட்டில் கரோனா தொற்று நாள்தோறும் 85 ஆயிரம் அளவில் இருந்தபோது கடும் பாதுகாப்பு விதிகளுடன் நீட் தேர்வு நடந்து முடிந்தது. அப்போதும் ராகுல் காந்தி, நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரியிருந்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி நடந்த நீட் தேர்வில் நாடு முழுவதும் 13.66 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில், 7.7 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT