ஹைதராபாத் எம்.பி.யும்ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவருமானஅசதுத்தீன் ஒவைஸி உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை அயோத்தியில் இன்றுதொடங்குகிறார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், அகில இந்திய இத்தாஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியும் போட்டியிடுகிறது. இக்கட்சித் தலைவர் ஓவைஸி, அயோத்தியில் இன்று பிரச்சாரத்தை தொடங்கி உ.பி.யின் கிழக்குப் பகுதி முழுவதும் ஒரு வாரம் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
அயோத்தியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ருடவுலி தொகுதியில் ஓவைஸியின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது, இது ராமஜென்ம பூமியில் இருந்து சுமார் 40 கி.மீ. தூரத்தில் உள்ளது. இதற்காக பிரம்மாண்டமான கூட்டத்துக்கு ஓவைஸி கட்சியினர் ஏற்பாடு செய்கின்றனர். ஆனால்,ஓவைஸியின் பிரச்சார முடிவுக்குஅயோத்தியை சேர்ந்த சாதுக்களும், முடித்து வைக்கப்பட்ட பாபர் மசூதி வழக்கின் மனுதாரரான இக்பால் அன்சாரியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எச்சரிக்கையாக இருங்கள்
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் இக்பால் அன்சாரி கூறும்போது, ‘‘ஒவைஸியிடம் முஸ்லிம்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். இவர் லட்சக்கணக்கான முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டி அரசியல் செய்ய கூடாது. இவரது மதரீதியான அரசியல் நடவடிக்கைகளுக்கு உ.பி. முஸ்லிம்கள் துணை போக கூடாது’’ என்று தெரிவித்தார்.
ஓவைஸி கூட்டம் தொடர்பான சுவரொட்டிகளில், அயோத்தியின் பழைய பெயரான பைஸாபாத் என்பதையே அந்தக் கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர். இதனால் அந்த சுவரொட்டிகளை சாதுக்கள் கிழித்து வருகின்றனர். நகரின் புதிய பெயரை குறிப்பிட மறுப்பதும் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் செயல் என்று ஒவைஸியை விமர்சித்துள்ளனர்.
இதுகுறித்து ’இந்து தமிழ்’நாளிதழிடம் தபஸ்வீ மடத்தின்தலைவர் மஹந்த் பரமஹன்ஸ் தாஸ் கூறும்போது, ‘‘பிரிவினை வாதத்தை தூண்டி ஒவைஸி மற்றொரு ஜின்னா எனப் பெயர் எடுக்க முயல்கிறார். பைஸாபாத் என்ற பழைய பெயரை குறிப்பிட்டு முதல்வர் யோகியை ஓவைஸி அவமதித்துள்ளார். நம்மாவட்டத்தை அயோத்தி எனசரியான பெயரில் குறிப்பிடாதவர் களை உள்ளே நுழைய விட மாட்டோம். அவரது கூட்டத்தையும் நடத்த விட மாட்டோம்’’ என்று தெரிவித்தார்.
இதற்கு ஏஐஎம்ஐஎம் கட்சி உ.பி. தலைவர் ஷானாவாஸ் சித்திக்கீ வெளியிட்ட அறிக்கையில், ‘‘பைஸாபாத் என்ற பெயரில் அழைத்து எங்களுக்கு பழக்கமாகி விட்டது. புதிய பெயரில் அழைக்க சற்று காலம் பிடிக்கும். ஒரு சிறிய பிரச்சினையை சாதுக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது’’ என்றார்.
அனைத்து மாநிலங்களிலும்..
ஆந்திராவை அடுத்து மகா ராஷ்டிராவில் கடந்த 2014 தேர்தல் மூலம் அண்டை மாநிலங்களில் தனது கால்களை பதித்தவர் ஒவைஸி. தொடர்ந்து பிஹாரிலும் அவரது கட்சி சில எம்எல்ஏ.க்களை பெற்றது. தமிழ்நாடு, மேற்குவங்க மாநிலங்களில் போட்டியிட்ட வருக்கு ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைக்க வில்லை.
அதனால் ‘ஓட் கட்வா (வாக்குகளை பிரிப்பவர்)’ என்று வடமாநிலங்களில் ஓவைஸி அழைக்கப்படுகிறார். உ.பி.யின் தலித், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆதரவு கட்சிகளுடனும் கூட்டணிக்கு ஒவைஸி முயல்கிறார். கடந்த 2017 தேர்தலில் ஒரு தொகுதியும் பெறாத அவரது கட்சி 2-வது முறையாக உ.பி.யில் போட்டியிடுவது நினைவு கூரத்தக்கது.