இந்தியா

அயோத்யாவில் நாளை தேர்தல் பிரச்சாரம் தொடங்குகிறார் ஒவைஸி: சாதுக்கள் எதிர்ப்பு 

ஆர்.ஷபிமுன்னா

ஹைதராபாத் எம்.பி.யும் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவருமான அசதுத்தீன் ஒவைஸி உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தை அயோத்யாவில் நாளை தொடங்குகிறார். இதற்கு முடிவிற்கு வந்த பாபர் மசூதி வழக்கின் மனுதாரர் இக்பால் அன்சாரியும், சாதுக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உ.பி.யில் அடுத்த வருடம் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அகில இந்திய இத்தாஹாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சியினர் போட்டியிடுகின்றனர். இதற்காக ஒவைஸி, தனது முதல் பிரச்சாரக் கூட்டத்தை அயோத்யா மாவட்டத்தில் தொடங்க உள்ளார். அங்கு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சட்டப்பேரவை தொகுதியான ருடவுலி, ஒவைஸியால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது ராமஜென்ம பூமியிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்தில் உள்ளது.

இங்கு ஒவைஸி கட்சியின் உ.பி. பிரிவினர் நாளை பிரம்மாண்டமான ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கின்றனர். இதற்கு அயோத்திவாசிகளான சாதுக்களும், முடித்து வைக்கப்பட்ட பாபர் மசூதி வழக்கின் மனுதாரரான இக்பால் அன்சாரியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் இக்பால் அன்சாரி கூறும்போது, ''ஒவைஸியிடம் முஸ்லிம்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். இவர் லட்சக்கணக்கான முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டி அரசியல் செய்யக் கூடாது. இவரது மதரீதியான அரசியல் நடவடிக்கைகளுக்கு உ.பி. முஸ்லிம்கள் துணைபோகக் கூடாது'' எனத் தெரிவித்துள்ளார்.

தமது கூட்டத்திற்கான சுவரொட்டிகளில் அயோத்யாவின் பழைய பெயரான பைஸாபாத் என ஒவைஸி கட்சியினரால் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2018இல் பைஸாபாத் எனும் பெயரை அயோத்யா என முதல்வர் யோகி ஆதித்யநாத் மாற்றிவிட்டார். இதன் காரணமாக, அந்த சுவரொட்டிகளை அயோத்தியின் சாதுக்கள் கிழித்தெறிந்து வருகின்றனர். இதுபோல், புதிய பெயரைக் குறிப்பிட மறுப்பதும் மதநல்லிணக்கத்தைக் கெடுக்கும் செயல் என ஒவைஸியை விமர்சித்துள்ளனர்.

இதுகுறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் தபஸ்வீ மடத்தின் தலைவரான மஹந்த் பரமஹன்ஸ் தாஸ் கூறும்போது, ''பழைய பெயரைக் குறிப்பிட்டு ஒவைஸி, நம் உ.பி. முதல்வர் யோகிஜியை அவமதித்துள்ளார். நம் மாவட்டத்தை அயோத்யா எனச் சரியான பெயரில் குறிப்பிடாதவர்களை உள்ளே நுழைய விடமாட்டோம். அவரது கூட்டத்தையும் நாளை நடத்த விடமாட்டோம்'' எனத் தெரிவித்தார்.

இதனிடையே, எதிர்ப்பாளர்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் உ.பி. தலைவரான ஷானாவாஸ் சித்திக்கீ வெளியிட்ட அறிக்கையில், ''பைஸாபாத் என்ற பெயரில் அழைத்து எங்களுக்குப் பழக்கமாகிவிட்டது. புதிய பெயரில் அழைக்க சற்று காலம் பிடிக்கும். ஒரு சிறிய பிரச்சினையான இதை சாதுக்கள் கணக்கில் கொள்ளக்கூடாது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திராவை அடுத்து மகாராஷ்டிராவின் 2014 சட்டப்பேரவைத் தேர்தல் மூலம் அண்டை மாநிலங்களில் தனது கால்களைப் பதித்தவர் ஒவைஸி. தொடர்ந்து பிஹாரிலும் அவரது கட்சி சில எம்எல்ஏக்களைப் பெற்றிருந்தது.

இதனால், அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் தனது கட்சியின் வேட்பாளர்களைப் போட்டியிட வைக்க முடிவு செய்தார் ஒவைஸி. தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலங்களில் போட்டியிட்டவருக்கு ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை.

இதன் காரணமாக, ஏஐஎம்ஐஎம் தலைவர் ஒவைஸிக்கு, 'ஓட் கட்வா (வாக்குகளைப் பிரிப்பவர்)' என்ற பெயர் ஏற்பட்டுவிட்டது. இதற்கு, பிஹாரின் கடந்த வருட சட்டப்பேரவைத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழக்கக் காரணமானதும் ஆகும்.

இவற்றைப் பற்றிக் கவலைப்படாமல், உ.பி.யின் தலித், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆதரவுக் கட்சிகளுடனும் கூட்டணிக்கு ஒவைஸி முயல்கிறார். 2017 தேர்தலில் ஒரு தொகுதியும் பெறாத அவரது கட்சி இரண்டாவது முறையாக உ.பி.யில் போட்டியிடுவது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT