இந்தியா

கிலானி உடல் மீது பாகிஸ்தான் கொடி போர்த்தப்பட்ட விவகாரம்: குடும்பத்தினர் மீது எப்ஐஆர் பதிவு

செய்திப்பிரிவு

மறைந்த காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானியின் உடல் மீது பாகிஸ் தான் கொடி போர்த்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்துள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சையது அலி ஷா கிலானி. காஷ்மீரை தனி நாடாக உருவாக்கும் கொள்கையுடன் பல்வேறு பிரிவினைவாத இயக்கங்களில் கிலானி அங்கம் வகித்துள்ளார். பின்னர், தெஹ்ரீக் - இ – ஹுரியத் என்ற பிரிவினைவாத அமைப்பை உருவாக்கி நடத்தி வந்தார். தேச விரோத நடவடிக்கைகளை முன்னெடுத்ததற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர், உடல்நலக்குறைவால் கடந்த புதன்கிழமை உயிரிழந்தார்.

இதன் தொடர்ச்சியாக, அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக காஷ்மீரில் இணைய தளம் மற்றும் செல்போன் சேவைகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழலில், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டி ருந்த கிலானியின் உடல் மீது அவரது குடும்பத்தினர் பாகிஸ்தான் கொடியை போர்த்திய தாகவும், இறுதிச்சடங்கின் போது தேசத்துக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டதாகவும் கூறப் படுகிறது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதை அடுத்து, இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் சையது அலி ஷா கிலானியின் குடும்ப உறுப்பினர்கள் மீது போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT