இந்தியா

ஆசிரியர் தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து- 44 ஆசிரியர்களுக்கு தேசிய விருது: குடியரசுத் தலைவர் வழங்கி கவுரவித்தார்

செய்திப்பிரிவு

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றி வரும் 44 ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கி கவுரவித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 44 சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. கரோனா காரணமாக காணொலி மூலம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:

உலகம் முழுவதும் சிறந்த கல்வியாளராகவும் தத்துவவாதியாகவும் அறியப்பட்ட டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். குடியரசுத் தலைவர் பதவியை வகித்தபோதிலும், தான் ஒரு ஆசிரியராக மட்டுமே நினைவுகூரப்பட வேண்டும் என அவர் விரும்பினார். சிறந்த ஆசிரியராக அழியாத அடையாளத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார்.

எனவேதான் அவரது பிறந்த நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தருணத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் சிறந்த ஆசிரியர்களின் கையில் பாதுகாப்பாக உள்ளது என அவர்கள் என்னிடம் உறுதி அளித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள்

சுதந்திர இந்தியாவின் 2-வது குடியரசுத் தலைவராக விளங்கிய சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதி, ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. சிறந்த கல்வியாளராக விளங்கிய அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது.

பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் மோடி தனது ட்விட்டர்பக்கத்தில், “ஆசிரியர் தினத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இளைய தலைமுறையினரை வளர்த்தெடுப்பதில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். கரோனா நெருக்கடி காலத்திலும் தொழில்நுட்ப உதவியுடன், மாணவர்களின் கல்விப் பயணத்தை ஆசிரியர்கள் உறுதி செய்திருப்பது பாராட்டுக்குரியது.

டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். நாட்டுக்காக அவர் ஆற்றிய பணிகளை நினைவுகூர்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.- பிடிஐ

SCROLL FOR NEXT