பாஜக எம்எல்ஏவும், எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரியின் பாதுகாப்பு அதிகாரி கடந்த 2018ம் ஆண்டு இறந்த வழக்கில் விசாரணை நடத்த சுவேந்து அதிகாரிக்கு கொல்கத்தா சிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
2018-ம் ஆண்டில் மர்மமாக உயிரழந்த சுவேந்து அதிகாரியின் தனிப்பரிவு அதிகாரி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளார்களா என்று போலீஸார் விசாரிக்க உள்ளனர்.
இதையடுத்து, சுவேந்து அதிகாரி நாளை காலை சிஐடி போலீஸார் அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று குற்றப் புலனாய்வு போலீஸார் சம்மனில் தெரிவித்துள்ளனர்.
சுவேந்து அதிகாரியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த சுப்ரதா சக்ரவர்த்தி திடீரென கடந்த 2018ம் ஆண்டு மர்மமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக குற்றப்புலனாய்வு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் சிஐடி போலீஸாரின் ஒருபிரிவினர், சக்ரவர்த்தி மர்ம மரணம் தொடர்பாக புர்பா மெதினாபூர் நகரில் விசாரணை நடத்தினர்.
புர்பா மெதினாபூரில் உள்ள கந்தி போலீஸ்நிலையத்தில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கை கடந்த ஜூலை 14ம் தேதி சிஐடி பிரிவினர் எடுத்து விசாரிக்கத் தொடங்கினர். இந்த வழக்குத் தொடர்பாக சக்ரவர்த்தி மனைவி கஞ்சிலால் சக்ரவர்த்தியிடமும் சிஐடி போலீஸார் விசாரித்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரி்க்கவே பாஜக தலைவர் சுவேந்து அதிகாரிக்கு சிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜியின் மருமகனும் டைமண்ட் ஹார்பர் தொகுதி எம்.பி. அபிஷேக் பானர்ஜி, அவரின் மனைவி ருஜிரா பானர்ஜி ஆகியோரை அமலாக்கப்பிரிவு சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் விசாரித்து வருகிறது.
நிலக்கரி கடத்தல் வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் அபிஷேக் பானர்ஜி, அவரின் மனைவி நாளை அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
இதற்கு பதிலடியாக பாஜக தலைவர் சுவேந்து அதிகாரிக்கு போலீஸார் 2018ம் ஆண்டு வழக்கை தோண்டி எடுத்து அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடந்த முறை ஆட்சியில் இருந்த போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தார்.
இதனால், முதல்வர் மம்தாவுக்கும், சுவேந்து அதிகாரிக்கும் இடையிலான மோதல் பெரிதானது. நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரியை எதிர்த்துப் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். ஆனால், தோல்வியை ஏற்க மறுத்த மம்தா பானர்ஜி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.