இந்தியா

நாட்டிலேயே அதிக மொழிகள் பேசப்படும் மாவட்டம் பெங்களூரு: 107 மொழிகள் பேசும் மக்கள் வாழ்வதாக ஆய்வில் தகவல்

இரா.வினோத்

இந்தியாவில் அதிக மொழிகள் பேசப்படும் மாவட்டம் பெங்களூரு எனவும், அங்கு 107 மொழிகள் பேசும் மக்கள் வாழ்வதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தை சேர்ந்த மூத்த ஆய்வாளர் ஷாமிகா ரவி, இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் பணியாற்றும் பேராசிரியர் முடித் கபூர் ஆகியோர் இணைந்து இந்தியாவில் அதிக மொழிகள் பேசப்படும் நகரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில், ‘‘2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் அதிகமான மொழிகள் பேசப்படும் மாவட்டம் கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரு என தெரியவந்துள்ளது. அங்கு மொத்தமாக 107 மொழிகளை பேசும் மக்கள் வாழ்கின்றனர்.

இதில் 22 அட்டவணைப்படுத்தப் பட்ட மொழிகளை பேசும் மக்க ளும், 85 அட்டவணையில் இடம்பெறாத மொழிகளை பேசும் மக்களும் அடங்குவர். அதிகபட்சமாககர்நாடக மாநில அலுவலக மொழியான கன்னடம் பேசப்படுகிறது.

பெங்களூருவில் 44.62 சதவீத மக்கள் கன்னடம் பேசுகின்றனர். தமிழ் (15%), தெலுங்கு (14%), உருது (12%), இந்தி (6%), மலையாளம் (3%), மராத்தி (2%), கொங்கனி (0.6%) உட்பட வேறுமொழிகளை சேர்ந்தவர்களும் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.

பெங்களூருவுக்கு அடுத்த இடத்தில் நாகாலாந்தின் திமாபூர் மாவட்டத்தில் 103 மொழிகளும், அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் 101 மொழிகளும் பேசப்படுகின்றன. குறைந்தபட்சமாக தமிழகத்தில் உள்ள‌ அரியலூர் , புதுச்சேரியில் உள்ள‌ ஏனாம் , உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூர் தேஹத் உள்ளிட்டமாவட்டங்களில் 20-க்கும் குறைவான மொழிகளே பேசப்படுகின்றன'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வாளர் ஷாமிகா ரவி கூறும்போது, ‘‘பெங்களூருவில் அதிக மொழி பேசும்மக்கள் வாழ்வதற்கு வரலாறு, பருவநிலை மற்றும் பொருளாதார காரணங்கள் இருக்கின்றன. 1960-களில் பொதுத்துறை நிறுவனங்களும், 1990-களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் தொடங்கப் பட்ட பின்னர் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மொழிகளை சேர்ந்த மக்கள் பெங்களூருவுக்கு இடம்பெயர்ந்தனர். இதனால் பெங்களூரு பன்மைத்துவம் பெற்ற நகரமாக மாறியது''என்றார்.

SCROLL FOR NEXT