இந்தியா

நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு ரூ.1.41 கோடி

பிடிஐ

பிரதமர் நரேந்திர மோடியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.1.41 கோடியாக உள்ளது. இதில் 13 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய அசையா சொத்தின் மதிப்பு மட்டும் 25 மடங்கு அதிகரித்து ரூ.1 கோடியாகி உள்ளது.

மோடி 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த நிதியாண்டின் இறுதி (31-3-2015) நிலவரப்படி மோடியின் சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட் டுள்ளது. அதன் விவரம்:

இதன்படி 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி ரூ.1.26 கோடி யாக இருந்த மோடியின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் ஒட்டுமொத்த மதிப்பு, 2015-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி ரூ.1.41 கோடியாக அதிகரித்தது. இதே காலத்தில் அவரிடமிருந்த ரொக்க தொகை ரூ.38,700-லிருந்து ரூ.4,700 ஆகக் குறைந்தது.

மோடிக்கு சொந்தமாக மோட்டார் வாகனம், கார், விமானம், படகு, கப்பல் என எந்த ஒரு வாகனமும் இல்லை. அவரது பெயரில் குஜராத்தில் மட்டுமே வங்கிக் கணக்கு உள்ளது. டெல்லியில் இல்லை. மோடி பெயரில் கடன் எதுவும் இல்லை.

சுமார் 45 கிராம் எடை கொண்ட 4 தங்க மோதிரங்கள் உள்ளன. இதன் மதிப்பு ரூ.1.19 லட்சம் ஆகும். இதுதவிர எல் அன்ட் டி இன்ப்ரா பத்திரங்கள் (வரி சேமிப்பு), தேசிய சேமிப்பு சான்றிதழ்கள் (என்எஸ்சி), ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் உட்பட அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.41.15 லட்சமாக இருந்தது.அசையா சொத்தைப் பொறுத்த வரை, குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள ஒரு குடியிருப்பு சொத்தில் 4-ல் ஒரு பங்கு உரிமை இவருக்கு உள்ளது.

இதில் 169.81 சதுர அடி கட்டிடத்தை உள்ளடக்கிய 3,531.45 சதுர அடி நிலம் இவரது பங்கு ஆகும். இந்த சொத்தை 2002-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி ரூ.1,30,488-க்கு வாங்கி உள்ளார். இதன் இப்போதைய உத்தேச சந்தை மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

SCROLL FOR NEXT