இந்தியா

‘‘நாட்டின் மனங்களை வென்றுள்ளார்’’- தங்கப்பதக்கம் வென்ற பிரமோத் பகத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு

செய்திப்பிரிவு

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்ற பிரமோத் பகத், பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பிரமோத் பகத் ஒட்டுமொத்த நாட்டின் மனங்களை வென்றுள்ளதாக புகழாரம் சூட்டியுள்ளார்.

டோக்கியாவில் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன, நாளையுடன் போட்டிகள் முடிவடைகின்றன.

இந்நிலையில் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி ஆட்டம் இன்று நடந்தது. இதில் இந்திய வீரரும், உலகின் நம்பர் ஒன் வீரருமான பிரமோத் பாகத்தை எதிர்த்து பிரிட்டன் வீரர் டேனியல் பெத்தல் மோதினார்.

பரபரப்பாக நடந்த இறுதி ஆட்டத்தில் டேனியல் பெத்தலை 21-14, 21-17 என்ற நேர்செட்களில் தோற்கடித்து இந்திய வீரர் பிரமோத் பாகத் தங்கப் பதக்கம் வென்றார். முதல் செட்டை 21 நிமிடங்களிலும், 2-வது செட்டை 24 நிமிடங்களிலும் பிரமோத் கைப்பற்றினார்.

பாராலிம்பிக்ஸ் போட்டியில் பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்ற பிரமோத் பகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“பிரமோத் பகத், ஒட்டுமொத்த நாட்டின் மனங்களை வென்றுள்ளார். தலைசிறந்த வீரரான அவரது வெற்றி, லட்சக் கணக்கானோருக்கு எழுச்சியூட்டும். போற்றத்தக்க அர்ப்பணிப்பை அவர் வெளிப்படுத்தினார்.

பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT