ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ), தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (என்டிஆர்ஓ) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், இந்துஸ்தான் கப்பல் கட்டும் மையம் சார்பில் இந்த ஐஎன்எஸ் துருவ் கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் டன் எடை கொண்ட இந்தக் கப்பல், இந்தியக் கடற்படையில் வரும் 10-ம் தேதிஇணைக்கப்படுகிறது.
ஆந்திராவின் விசாகப்பட்டினத் தில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமை வகிக்கிறார். கடற்படை தளபதி கரம்பீர்சிங், என்டிஆர்ஓ தலைவர் அனில்தஸ்மானா மற்றும் டிஆர்டிஓ அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.
இந்தியப் பகுதிகள் மீது பறக்கும் மற்ற நாடுகளின் செயற்கைக்கோள்கள் மற்றும் இந்திய நகரங்களை நோக்கி வரும் ஏவுகணைகளை கண்டறிந்து எச்சரிக்கை செய்ய வல்லதுதுருவ் கப்பல். இந்த நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கப்பல்கள் இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளிடம் மட்டுமே உள்ளன. இந்த நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்திருக்கிறது. ஆழ்கடல் ஆராய்ச்சி தொழில் நுட்பமும் இந்தக் கப்பலில் உள்ளது. இதனால் எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களையும் எளிதில் கண்டறிந்து ராணுவத்துக்கு தகவல் அனுப்ப முடியும்.
சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் சூழலில், அந்நாடுகளின் மூலம் வான் அல்லது கடல் வழியாக வரும் அச்சுறுத்தல்களை முறியடிக்க துருவ் கப்பல் பெரிதும் உதவும் என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - பிடிஐ