போதை மருந்து விவகாரத்தில் நேற்று நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிடம் ஹைதராபாத்தில் அமலாக்கத்துறையினர் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
நடிகர் நவ்தீப் ஹைதராபாத்தில் நடத்தி வரும் எஃப் கிளப்பில் நடைபெறும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் நடிகர்கள் பங்கேற்பது வழக்கம். இந்த கிளப்பில் பணியாற்றும் மேலாளர் மற்றும் நடிகர் நவ்தீப் மூலமாக இங்கு வரும் நடிகர்களுக்கு போதை மருந்தை பழக கற்றுக் கொடுப்பதாக ஏற் கெனவே அரசு தரப்பு சாட்சியாக மாறியிருக்கும் போதை மருந்து வியாபாரி கெல்வின் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சமீபத்தில் மர்மமான முறையில் இறந்து போன பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் வழக்கிலும் கெல்வினை போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பினர் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் சுஷாந்தின் முன்னாள் காதலியான ரியா சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கும், போதைப்பொருள் வியாபாரிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
ரியா சக்ரவர்த்தியின் தோழியான நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிடமும் சுஷாந்த் மரணம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதனிடையே, ஹைதராபாத் தில் கடந்த சில மாதங்களாக நடிகை ரகுல் ப்ரீத் சிங், எஃப் கிளப்புக்கு சென்று வருவதை தெலங்கானா போலீஸார் உறுதிப்படுத்தினர். இதையடுத்து,அமலாக்கத்துறை சார்பில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி நேற்றுஆஜரான அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 மணிநேரம் விசாரணை நடத்தினர். .
அப்போது மும்பை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள அவரது 3 வங்கி கணக்குகளின் விவரங்களை கேட்டு பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், எஃப் கிளப் பார்ட்டியில் கலந்து கொண்டது ஏன்? சுஷாந்த்தின் முன்னாள் காதலியான ரியா சக்ரவர்த்தியுடன் எப்படி நட்பு ஏற்பட்டது ? போதைமருந்து உபயோகிக்கும் பழக்கம்உள்ளதா? போன்ற பல கேள்விகளை அமலாக்கத் துறையினர் கேட்டுள்ளனர்.
மேலும் சில ஆவணங்களையும் பெற்ற அமலாக்கத்துறையினர், ரகுல் ப்ரீத் சிங்கிடம் நடத்திய விசாரணை அனைத்தையும் வீடியோ பதிவு செய்தனர். இவரை தொடர்ந்து, நடிகர் ராணா, தருண், நவ்தீப், எஃப் கிளப் மேலாளர், நடிகை முமைத் கான் உள்ளிட்டோரிடமும் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத் தக்கது.