இந்தியா

5 முதல் 18 வயது சிறார்களுக்கு 2 கட்டமாக தடுப்பூசி சோதனை நடத்த ‘பயாலஜிக்கல் இ' நிறுவனத்துக்கு அனுமதி

செய்திப்பிரிவு

5 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு இரண்டு கட்ட கரோனா தடுப்பூசி சோதனை நடத்த 'பயாலஜிக்கல் இ' நிறுவனத்துக்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு மையம் அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில், கரோனா முன்களப் பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. பின்னர், படிப்படியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதியளிக்கப்பட்டது. இந்தியாவை பொறுத்தவரை, தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியுமே பெரும்பாலும் மக்கள் பயன்பாட்டில் உள்ளன. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி சில இடங்களில் பயன்படுத்தப்ப டுகின்றன.

நாட்டில் தற்போது 66 கோடிக்கும் மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். நடப்பாண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி விடுவது என்ற இலக்கினை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

இதனிடையே, கரோனா பெருந்தொற்றில் இருந்து 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு மருந்து நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

கோர்பேவேக்ஸ் தடுப்பூசி

அந்த வகையில், 5 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்காக 'பயாலஜிக்கல் இ' நிறுவனம் தயாரித்திருக்கும் 'கோர்பேவேக்ஸ்' கரோனா தடுப்பூசியை இரண்டு கட்டமாக சோதனை நடத்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அண்மையில் அனுமதிஅளித்துள்ளது. நிபுணர் குழுவின்பரிந்துரையின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் 10 இடங்களில் இந்த சோதனை நடத்தப்படவுள்ளது. இதற்காக 30 கோடி தடுப்பூசிகளுக்கு முன்பணமாக ரூ.1,500 கோடியை 'பயாலஜிக்கல் இ' நிறுவனத்துக்கு மத்திய அரசு செலுத்தியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், இந்தியாவின் ஜைடுஸ் கேடிலா நிறுவனம் தயாரித்திருக்கும் சிறார்களுக்கான (12 – 18 வயது வரை) கரோனா தடுப்பூசிகள், அவசரகால பயன்பாட்டு அனுமதியை ஏற்கனவே பெற்றுவிட்டன. வரும் அக்டோபர் முதல்இந்த தடுப்பூசி சிறார்களுக்கு செலுத்தப்படவுள்ளது. பாரத் பயோடெக் நிறு வனத்தின் சிறார்களுக்கான தடுப் பூசிகள் சோதனைக் கட்டத்தில் உள்ளன. இதன் முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியாகும் எனத் தெரிகிறது. - பிடிஐ

SCROLL FOR NEXT