ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் | கோப்புப்படம் 
இந்தியா

ஆர்எஸ்எஸ் அமைப்பின் 2 நாட்கள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: 5 மாநிலத் தேர்தல் குறித்து ஆலோசனை

ஏஎன்ஐ

ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் 2 நாட்கள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாக்பூரில் இன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராவது குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடத்தப்படும். கடந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவல் காரணமாக மிகவும் குறைந்த அளவிலான உறுப்பினர்களைக் கொண்டு மிகுந்த பாதுகாப்பாக நடத்தப்பட்டது.

இந்நிலையில் நாட்டில் கரோனா பரவல் குறைந்து வந்தாலும், இந்த முறையும் முழுமையான கரோனா பாதுகாப்பு வழிகாட்டல்களுடன் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இன்றும், நாளையும் நடக்கும் இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைப்புச் செயலாளர்கள், ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடைய மற்ற அமைப்புகளின் அமைப்புச் செயலாளர்களும் பங்கேற்கிறார்கள்.

இந்தக் கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் 5 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு எவ்வாறு தயாராவது, திட்டங்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஸ்வ ஹிந்த் பரிஷத், வித்யார்த்தி பரிஷத், பாரதிய மஸ்தூர் சங்கம், வித்யா பாரதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொதுச் செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்களும் இதில் பங்கேற்கிறார்கள்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபல்லே, பாஜக சார்பில் பிஎல் சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

கடந்த மாதம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகிகளுக்கும், உ.பி.யில் முதல்வர் யோகி அரசின் அமைச்சர்களுக்கும் இடையே ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

SCROLL FOR NEXT