நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் சுமுகமாக நடக்கும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. ஜேஎன்யூ மாணவர்களுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை, ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் வெமுலாவின் தற் கொலை, விலைவாசி உயர்வு உட்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட் டுள்ளன. இதனால் வழக்கம் போலவே பட்ஜெட் கூட்டத் தொடரும், அமளியால் முடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளில் உள்ள நண்பர்கள் சிலர் நேர்மறை யான சமிக்ஞைகளை காண்பித் திருப்பதால் இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் சுமுகமாகவும், ஆக்கப் பூர்வ விவாதங்கள் நிறைந்ததாகவும் இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:
அரசை கடுமையாக விமர்சித்து, தவறுகளை எதிர்க்கட்சிகள் சுட்டிகாட்டி வருகின்றன. இந்த மனப்பாங்கு ஜனநாயகத்துக்கு மேலும் வலுசேர்க்கும்.
கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பான பல்வேறு விவாதங்களில் பங்கேற்ற எதிர்க் கட்சி நண்பர்கள் சிலர் நேர்மறை யான சமிக்ஞைகளை வெளிப் படுத்தியுள்ளனர். இதனால் பட்ஜெட் கூட்டத் தொடர் சுமுகமாகவே நடக்கும் என நம்புகிறேன்.
நாட்டில் உள்ள 125 கோடி மக்களின் முழு கவனமும் தற்போது பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் மீது தான் உள்ளது. சர்வ தேச பொருளாதாரத்தில் இந்தியா தற்போது முக்கிய இடத்தை பிடித் திருப்பதால், உலக நாடுகளும் இந்த பட்ஜெட் கூட்டத் தொடரை உன்னிப்பாக கவனிக்க தொடங்கி யுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
வெங்கய்யா நாயுடு மறுப்பு
இதற்கிடையில் ஜேஎன்யூ விவ காரத்தில் மறைப்பதற்கோ கவலைப் படுவதற்கோ ஒன்றும் இல்லை என்றும் ஜேஎன்யூவை மூட மத்திய அரசு பரிசீலித்து வருவதாக பரவி வரும் செய்திகளில் உண்மை இல்லை என்றும் நாடாளுமன்ற விவ காரத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே நேற்று செய்தியாளர் களிடம் பேசிய அவர், ‘‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் 10 மாணவர்கள் தற் கொலை செய்து கொண்டனர். இத்தகைய மோசமான சூழ் நிலையை அப்போது உருவாக்கி யது யார்? தற்போது ஜேஎன்யூவில் நடந்து வரும் சம்பவங்கள் ஒட்டு மொத்த நாட்டையும் தொந்தரவு படுத்தி வருகிறது. தேசத்துக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதர வாகவும் ஒலிக்கும் முழக்கங்களால் மக்கள் நொந்து போயுள்ளனர். இது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராகவே இருக்கிறது. இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. ஜேஎன்யூவை மூடும் பேச்சுக்கே இடமில்லை. ஜேஎன்யூவின் புகழை கெடுப்பதற்காக விஷமிகள் சிலர் வேண்டுமென்றே பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர்’’ என்றார்.