நாடு முழுவதும் மாதந்தோறும் சுமார் 8 ஆயிரம் பேரை கண்காணிக்க அனுமதிப்பது ஏன் என மத்திய அரசு பதில் அளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களான பொதுநல மனு தாக்கல் மையம் மற்றும் மென்பொருள் சுதந்திர சட்ட மையம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி டி.என்.படேல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறியதாவது:
நாடு முழுவதும் மாதந்தோறும் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பேரை கண்காணிக்கவும் அவர்களுடைய தொலைபேசி உரையாடலை இடைமறித்து கேட்கவும் அனுமதி அளிப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. இது பொதுமக்களின் அந்தரங்க உரிமையை பாதிக்கும் வகையில் உள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தலையிட வேண்டும். எந்த அடிப்படையில் மத்திய அரசு இந்த அனுமதியை வழங்குகிறது என மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட வேண்டும். மேலும் இந்த நடைமுறைகளுக்காக இந்திய தொலைத்தொடர்பு சட்டம் மற்றும் தகவல்தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின்படி ஒரு தனி அமைப்பை உருவாக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் வாதாடினார்.
பின்னர் நீதிபதிகள் கூறும்போது “தனி நபர்களை கண்காணிக்கவும் அவர்களின் தொலைபேசி உரையாடலை இடைமறித்து கேட்கவும் எந்த சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பது குறித்துமத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.