இந்தியா

பெண்ணுக்கு நஷ்ட ஈடு வழங்காமல் இழுத்தடிப்பு; 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிறை தண்டனை, அபராதம்: ஆந்திர உயர் நீதிமன்றம் தீர்ப்பு

என்.மகேஷ்குமார்

பெண்ணிடம் நிலம் பெற்றுக் கொண்டு அதற்கு நஷ்ட ஈடு வழங்காதது தொடர்பான வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து ஆந்திர உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்த சாய் பிரம்மா எனும் பெண்ணுக்கு சொந்தமான நிலத்தை அரசு கையகப்படுத்தி யது. அதற்கு நஷ்ட ஈடு வழங்க கோரி அந்த பெண் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதி மன்றமும், அந்த பெண்ணுக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. ஆனால், பல ஆண்டுகள் கழிந்தும் நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை.

நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு பொறுப்பு வகித்த 5 நெல்லூர் மாவட்ட ஆட்சியர்களும் நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வில்லை. இதையடுத்து ஆந்திர உயர் நீதிமன்றத்தில் சாய் பிரம்மா மீண்டும் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மன் மோகன் சிங்குக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தது. எஸ்.எஸ். ராவத் ஐஏஎஸ் அதிகாரிக்கு 2 மாதம் சிறை தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்தது. சேஷகிரி ராவ், முத்தியால ராஜு, இந்தியாஸ் ஆகிய மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 2 வாரம் சிறை தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்தது. நெல்லூர் ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் ஊதியத்தில் இருந்து அந்த பெண்ணுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

SCROLL FOR NEXT