தமிழகம் உட்பட 5 மாநில தேர்தலில் பயன்படுத்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை விடுவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த மார்ச், ஏப்ரல் மாதங் களில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாமில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. கடந்த மே 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. ஐந்து மாநில தேர்தலில் 4.48 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 3.96 லட்சம் விவிபாட் இயந்திரங்களும் பயன் படுத்தப்பட்டன.
சட்ட விதிகளின்படி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு 45 நாட்களுக்குள் தேர்தல் வழக்கு களை தாக்கல் செய்யலாம். கரோனாவால் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு தேர்தல் வழக்குகளை பதிவு செய்வதற்கான அவகாசத்தை உச்ச நீதிமன்றம் காலவரையின்றி நீட்டித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறி யிருப்பதாவது:
தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல் தொடர்பான வழக்குகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை உச்ச நீதிமன்றம் காலவரையின்றி நீட்டித்திருக்கிறது. இதன் காரணமாக 5 மாநில தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்தி ரங்கள், விவிபாட் இயந்திரங்களை பயன்படுத்த முடியவில்லை.
அடுத்த ஆண்டு உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தராகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. கரோனா பரவலை தடுக்க கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதன்படி 4.6 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்களும் 4 லட்சம் விவிபாட் இயந்திரங்களும் தேவைப்படும். தேர்தல் ஆணையத்திடம் தற்போது 1.4 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் ஒரு லட்சம் விவிபாட் இயந்திரங்கள் மட்டுமே கையிருப்பில் உள்ளன.
உ.பி. உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நெருங்கி வருகிறது. தேர் தலுக்கு முன்பாக இயந்திரங்களை பரிசோதிக்க வேண்டும். சம்பந்தப் பட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். எனவே தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களை விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையத்தின் மனு மீது வரும் 7-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்தார்.