கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மே மாதத்தோடு நிறுத்தப்பட்டிருந்த பிரி்ட்டிஷ் ஏர்வேஸின் சென்னை-லண்டன் நேரடி விமான சேவை இன்று முதல்(வியாழக்கிழமை) மீண்டும் தொடங்கப்படுகிறது
இந்த தகவலை பிரி்ட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா-பிரிட்டன் இடையே பயணிகள் விமானப் போக்குவரத்து கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதியோடு நிறுத்தப்பட்டது. அதன்பின் இரு நாட்டு அரசுகளுக்கு இடையே ஏர்-பபுள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறைந்த அளவில்தான் விமானங்கள் இயக்கப்பட்டன.
சென்னையிலிருந்து லண்டனுக்கு நேரடியாக பயணிகள் விமானச் சேவை இயக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு மே மாதத்தோடு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இரு நாடுகளிலும் கரோனா வைரஸ் பரவல் குறைந்ததையடுத்து, மீண்டும் சென்னை-லண்டன் நேரடி பயணிகள் விமான சேவையைத் தொடங்க பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம்முடிவு செய்துள்ளது.
இது குறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “ லண்டன் முதல் சென்னை வரையிலான நேரடி விமான சேவை வாரத்தில் புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையில் இயக்கப்படும். சென்னையிலிருந்து லண்டனுக்கு திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் விமானச் சேவை இயக்கப்படும்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக தங்கள் அன்புக்குரியவர்களை பரிந்த மக்கள் மீண்டும் ஒன்றாக இணைவதில் சென்னையிலிருந்து பிரிட்டனுக்கு நேரடி பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை முக்கியப்பங்கு வகிக்கும்” எனத் தெரிவித்துள்ளது.