போதைப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் வெளிநாட்டு நபரின் வங்கி கணக்கில் அடிக்கடி பெரிய தொகைகளை தெலுங்கு திரைப்பட நடிகர், நடிகைகள் செலுத்துவது அமலாக்கப் பிரிவினரின் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
போதைப்பொருள் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த 12 பேருக்கு ஹைதராபாத் அமலாக்கப் பிரிவினர் கடந்த 2 வாரங்களுக்கு முன் சம்மன் அனுப்பினர். ஏற்கெனவே கடந்த 2017-ல் இந்த விவகாரத்தில் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த 11 பேரிடம் கலால் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதனிடையே, போதைப் பொருள் விற்பனையில், ஹவாலா பணம் கைமாறியதாக அமலாக்கப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதில் முக்கிய குற்றவாளியான நைஜீரிய நாட்டைச் சேர்ந்த கெல்வின் என்பவரிடம் கலால் மற்றும் அமலாக்கப் பிரிவினர் 12 முறை விசாரணை நடத்தியுள்ளனர்.
இவர் அப்ரூவராக மாறி பல தகவல்களை அளித்து வருகிறார். அதன் அடிப்படையிலேயே, தெலுங்கு திரையுலகை சேர்ந்த 12 பேரிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நேற்றுமுன்தினம், பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத்திடம் அமலாக்கப் பிரிவினர் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இவரது 3 வங்கி கணக்குகளை ஆய்வு செய்தனர். இவரை தொடர்ந்து, போதை பொருள் விற்பனையாளரான கெல்வினிடம் மீண்டும் நேற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின.
இவரது வங்கி கணக்கில் அடிக்கடி பெரிய தொகையை தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த நடிகைகள், நடிகர்கள், இயக்குனர் செலுத்தியது தெரியவந்தது. இதனால் தெலுங்கு திரையுலகில் போதைப் பொருள் பயன்பாடு தற்போது ஊர்ஜிதமாகி உள்ளது. பூரி ஜெகன்நாத்தை தொடர்ந்து, நடிகைகள் மொமைத் கான், சார்மி, ரகுல் ப்ரீத்சிங் மற்றும் நடிகர்கள் தருண், ரவிதேஜா, நவ்தீப் உட்பட மொத்தம் 12 பேரிடம் வரும் 22-ம் தேதி வரை விசாரணை நடத்தவுள்ளதாக அமலாக்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதில் மேலும் பல உண்மைகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.