இந்தியாவில் சைபர் குற்றங்களைத் தடுக்க விபிஎன் சேவைகளை நிரந்தரமாகத் தடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
ஆன்லைனைப் பயன்படுத்தும் குற்றவாளிகள் தங்களை அடையாளம் தெரியாதவர்களாக இருக்க இந்த விபிஎன் சேவை அனுமதிக்கிறது என்பதால் தடை கோரி பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் வெளிப்பணி ஒப்படைப்பில் அதிகமாக இருக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கால் சென்டர் ஆகியவற்றில் தொலைவில் இருந்து பணியாற்றுவோர் வசதிக்காக அதிகாரபூர்வ விபிஎன்களைப் பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு இதர சேவை வழங்குவோருக்கான (ஓஎஸ்பி) கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது.
அந்தத் தளர்வு வழங்கப்பட்ட சில மாதங்களுக்குப் பின், இந்தப் பரிந்துரைகளை உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு வழங்கியுள்ளது. கரோனா காலத்தில் மத்திய அரசு வழங்கிய இந்தக் கட்டுப்பாடுகள் தளர்வை இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வரவேற்றன.
பெண் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கொடுமைகள் குறித்த 230-வது அறிக்கையில் அரசு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ற தலைப்பில் நிலைக்குழு அறிக்கை வழங்கியுள்ளது.
உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகள் குறித்து மீடியாநாமா வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இன்டர்நெட் சேவை வழங்குவோரின் உதவியுடன் இதுபோன்ற விபிஎன்களைக் கண்டறிந்து நிரந்தரமாகத் தடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்.
இந்தியாவில் இதுபோன்ற விபிஎன்களை நிரந்தரமாகத் தடுக்க, சர்வதேச நிறுவனங்களுடன் இந்தியா ஒரு ஒருங்கிணைந்த செயல்முறையை உருவாக்க வேண்டும் என்றும் அந்தப் பரிந்துரையில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அதில், “விபிஎன் சேவைகளும், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான டார்க் வெப் சேவையும் சைபர் பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்து, கிரிமினல்களை அடையாளம் தெரியாதவகையில் ஆன்லைனில் செயல்பட அனுமதிக்கிறது. இன்றைய தேதியில், விபிஎன்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்ய முடியும். பல இணையதளங்கள் இந்த வசதிகளை வழங்கி, அவர்களுக்கு விளம்பரம் செய்கின்றன.
ஆதலால், மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களின் உதவியுடன் அதுபோன்ற விபிஎன்களைக் கண்டறிந்து நிரந்தரமாகத் தடுக்க வேண்டும்.
சர்வதேச நிறுவனங்களுடன் இந்தியா ஒரு ஒருங்கிணைந்த செயல்முறையை உருவாக்க வேண்டும். கண்காணித்தல், பின்தொடர்தல் ஆகியவற்றின் செயல்முறையை வலிமைப்படுத்தி, அதுபோன்ற விபிஎன், டார்க் வெப்களைத் தடுக்க அமைச்சகங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்''.
இவ்வாறு அந்தப் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது