இந்தியா

கர்நாடகாவில் ஒரே கல்லூரியில் 32 மாணவர்களுக்கு கரோனா:  கேரளா சென்று வந்தவர்கள்

செய்திப்பிரிவு

கர்நாடக மாநிலம் கோலாரில் உள்ள ஒரு கல்லூரியில் 32 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்களில் சிலர் அண்மையில் கேரளா சென்று வந்துள்ளனர்.

இந்தியாவில், கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. இதை அடுத்து ஊரடங்கில் மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன் கருதி, பள்ளி மற்றும் கல்லூரிகளை மாநில அரசுகள் திறந்து வருகின்றன.

கர்நாடகாவிலும் கரோனா தொற்று குறைந்து வருகிறது. கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 657 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 1,217 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன.

செப்டம்பர் மாதம் 6ம் தேதி முதல், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என, அம்மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நாகேஷ் அறிவித்துள்ளார்.

இதுபோலவே கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகளில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்படுகிறது. வாரத்தில் ஐந்து நாட்களுக்கு பள்ளிகள் செயல்படுகிறது. சமூக இடைவெளி, முகக் கவசத்துடன் மாணவர்கள் வருகை தருகின்றனர்.

இந்தநிலையில் கோலாரில் உள்ள ஒரு கல்லூரியில் 32 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மாணவர்களில் சிலர் அண்மையில் கேரளா சென்று வந்துள்ளனர். அங்கிருந்து இவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இதனையடுத்து கல்லூரி மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அனைத்து மாணவர்களுக்கும் கரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.

கல்லூரி மாணவர்களை கேரளா செல்ல அனுமதித்த கல்லூரி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக சுகாதார அமைச்சர் டாக்டர் கே சுதாகர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT