இந்தியா

போலீஸ் முன்னிலையில்தான் தாக்கப்பட்டேன்: கண்ணய்யா குமார் திட்டவட்டம்

செய்திப்பிரிவு

பிப்ரவரி 17-ம் தேதியன்று பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சிலர் தன்னை போலீஸார் முன்னிலையில்தான் தாக்கினார்கள் என்று ஜேஎன்யூ மாணவர் தலைவர் கண்ணய்யா குமார் உச்ச நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞர்கள் அடங்கிய விசாரணைக் குழுவிடம் தெரிவித்தார்.

கடந்த வாரத்தில் கண்ணய்யா குமார் தன்னை எப்படித் தாக்கினார்கள் என்ற விவரங்களை அளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

ஆனால், உச்ச நீதிமன்றத்திடம் டெல்லி போலீஸார் அளித்த அறிக்கையில் இதற்கு நேர் எதிராக கூறப்பட்டது. ஆனால் இந்த வீடியோவில் உச்ச நீதிமன்றத்தினால் விசாரிக்க நியமிக்கப்பட்ட 5 வழக்கறிஞர்கள் அடங்கிய குழுவிடம் கண்ணய்யா குமார் தான் தொடர்ச்சியாக போலீஸ் முன்னிலையில் வழக்கறிஞர்கள் சிலரால் தாக்கப்பட்டதன் விவரங்களைத் தெரிவித்த காட்சி இடம்பெற்றுள்ளது.

மேலும் தாக்குதலின் போது தனது பேன்ட் நழுவியதையும், அவரது சட்டைப் பொத்தான்கள் கழற்றப்பட்டதையும், செருப்புகள் கால்களிலிருந்து நழுவிச் சென்றது உட்பட துல்லியமாக கண்ணய்யா குமார் விவரித்தார்.

கும்பல் தன்னை போலீஸ் முன்னிலையிலேயே கீழே தள்ளிவிட்டு காயப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

“நான் போலீஸாரிடம் புகார் தெரிவித்தும் அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை. நான் நீதிபதியிடம், எனக்கு சட்டம், நீதி மீது நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்து விட்டேன், என்னைத் தாக்கியவர்கள் மிகவும் அரசியல் ரீதியாக தூண்டப்பட்டவர்கள்.

நான் இந்நாட்டின் இளைஞன், நான் ஜே.என்.யூ-வில் எனது ஆராய்ச்சிப் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறேன், ஆனால் நான் தேச துரோகி என்று முத்திரைக் குத்தப்பட்டுள்ளேன். ஊடகத்தின் ஒருபகுதி என்னை விசாரணையில் தள்ளிவிட்டுள்ளது” என்று உணர்ச்சிவசப்பட்ட கண்ணய்யா குமார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT