இந்தியா

ஏன் அழகாக தானே இருக்கிறது?- ராகுல் காந்தியின்  ஜாலியன் வாலாபாக்  விமர்சனத்தை மறுத்த அம்ரீந்தர் சிங் 

செய்திப்பிரிவு

ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தைப் புதுப்பிப்பதாக கூறி அதன் பழமையை மத்திய அரசு அழித்து விட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து இருந்தநிலையில் அக்கட்சியை சேர்ந்த பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் அழகாக இருப்பதாக கூறியுள்ளார்.

ஜாலியன் வாலாபாக் நினைவிட வளாகத்தைப் புதுப்பித்து அதை தேசத்துக்காகக் கடந்த சனிக்கிழமை பிரதமர் மோடி அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியின்போது, நினைவிடத்தில் உள்ள டிஜிட்டல் அருங்காட்சியகத்தையும் பிரதமர் மோடி திறந்துவைத்தார். ஜாலியன் வாலாபாக் பகுதியில் பல்வேறு புனரமைப்புப் பணிகளையும் மத்திய அரசு செய்துள்ளது.

ஜாலியன் வாலாபாக்கிற்குள் ஜெனரல் டயர் தனது படைகளோடு புகுந்த நுழைவு வாயிலில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் ஜாலியன் வாலாபாக்கிலிருந்து வெளியேறும் பகுதியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சூட்டிலிருந்து மக்கள் தப்ப முடியாதபடி அடைக்கப்பட்ட குறுகிய பாதை மாற்றப்பட்டு பளபளப்பான புதிய தளம் அமைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டிலிருந்து தப்பிக்க மக்கள் குதித்த கிணறு கண்ணாடியால் மூடப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களால் ஜாலியன் வாலாபாக்கில் நினைவிடம் தனது பழமையை இழந்துவிட்டதாகவும், அங்கு நடந்த படுகொலையின் கோரத்தை வெளிப்படுத்தும் தடயங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு சமூகவலைதங்களிலும், வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியிலும் கண்டனம் எழுந்துள்ளது.

இதைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் மத்திய அரசைச் சாடியிருந்தார். “தியாகத்தின் அர்த்தம் தெரியாத ஒரே ஒருவரால் மட்டுமே ஜாலியன் வாலாபாக் தியாகிகளை அவமானப்படுத்த முடியும்’’ எனக் கூறியிருந்தார்.

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் ராகுல் காந்தியின் விமர்சனத்தை மறுக்கும் விதமாக பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘அங்கு என்ன மாற்றப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை இது மிகவும் அழகாக இருக்கிறது’’ எனக் கூறினார்.

ராகுல் காந்தியின் கருத்துக்கு மாறாக அம்ரீந்தர் சிங் கருத்து தெரிவித்துள்ளது காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT