பிஹாரைச் சேர்ந்த 14 வயது சிறுவன், ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளான். 2,587-வது ரேங்க் பெற்றிருக்கும் இந்தச் சிறுவன் இயற்பியல் படிக்க வுள்ளான்.
ரோஹ்டாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த சிவானந்த் திவாரி எனும் அந்த சிறுவன் மிகக்குறைந்த வயதில் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுள் ஒருவனாகியுள்ளான். 15 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் ஐ.ஐ.டி. தேர்வு எழுத முடியாது என்பதால், நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்று தேர்வை எழுதியுள்ளான்.
சிவானந்த் திவாரி தன்னுடைய 7 வயதில் பகவத் கீதை உள்ளிட்ட இந்து சமயத்தின் பல புத்தகங்களை மனனம் செய்தான். அதன்பிறகு, தன் கிராமம், அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று ஆன்மிக பிரச்சாரத்தில் ஈடுபட்டான்.
அந்தச் சிறுவனின் தந்தை அவனை ஆன்மிகப் பயணத்தில் நடத்தினாலும், அவனுடைய திறமையைக் கண்ட ஐஐடி நுழைவுத் தேர்வு பயிற்சி ஆசிரியர் ஒருவர் 2011-ம் ஆண்டு சிவானந்த் திவாரியை டெல்லிக்கு அழைத்துச் சென்றார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐ.ஐ.டி. பற்றிய சிந்தனை அச்சிறுவனுக்கு இல்லை. எனினும், விவசாயியாக உள்ள அவனது தந்தையும், ஊர் மக்களும் அந்தச் சிறுவனின் திறமை மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தனர்.
இதுகுறித்து அந்தச் சிறுவன் கூறும்போது, "டெல்லியில் உள்ள நாராயணா ஐ.ஐ.டி. பி.எம்.டி. அகாடமியின் இயக்குநர் யு.பி.சிங் என்னை டெல்லிக்கு அழைத்துச் சென்றார். அங்கு எனக்காக பிரத்யேக பாடங்கள் தயாரிக்கப்பட்டன. டெல்லியில் இருந்து என் பள்ளிப் படிப்பை தொடர்ந்து கொண்டிருந்த அதே சமயத்தில் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு எழுதவும் தயாரானேன். அவர்கள் ஆங்கில மொழியையும் கற்றுத்தந்தார்கள்" என்றான்.
மேலும், "ஐ.ஐ.டி.யில் நான் இயற்பியல் பாடம் படிக்கப் போகிறேன். அறிவியலையும் ஆன்மிகத்தையும் தொடர்பு படுத்துவேன். இயற்பியலில் ஆய்வுகள் மேற்கொள்வேன். ஆனால் ஆன்மிகத்தைக் கை விடமாட்டேன்" என்றான்.