காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி | கோப்புப்படம் 
இந்தியா

ஜாலியன் வாலாபாக் தியாகிகளுக்கு அவமானம்: மத்திய அரசு மீது ராகுல் காந்தி தாக்கு

பிடிஐ

ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தைப் புதுப்பித்த மத்திய அரசின் செயல் உயிர்த் தியாகம் செய்த தியாகிகளை அவமானப்படுத்துவதாகும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ஜாலியன் வாலாபாக் நினைவிட வளாகத்தைப் புதுப்பித்து அதை தேசத்துக்காகக் கடந்த சனிக்கிழமை பிரதமர் மோடி அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியின்போது, நினைவிடத்தில் உள்ள டிஜிட்டல் அருங்காட்சியகத்தையும் பிரதமர் மோடி திறந்துவைத்தார். ஜாலியன் வாலாபாக் பகுதியில் பல்வேறு புனரமைப்புப் பணிகளையும் மத்திய அரசு செய்துள்ளது.

இதைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் மத்திய அரசைச் சாடியுள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில், “தியாகத்தின் அர்த்தம் தெரியாத ஒரே ஒருவரால் மட்டுமே ஜாலியன் வாலாபாக் தியாகிகளை அவமானப்படுத்த முடியும்.

நான் தியாகியின் மகன். இதுபோன்று தியாகிகளை அவமானப்படுத்துவதை எந்த விலை கொடுத்தேனும் பொறுக்கமாட்டேன். இதுபோன்ற அநாகரீகமான கொடுமையை எதிர்க்கிறோம். தியாகிகள் இந்த தேசத்துக்கு என்ன செய்தார்கள் என்பதை சுதந்திரத்துக்குப் போராடாதவர்களால் புரிந்துகொள்ள முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

ரவுலட் சட்டத்தை எதிர்த்துக் கடந்த 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி ஜாலியன் வாலாபாக் இடத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீது ஆங்கிலேயப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT