பெங்களூருவில் போதைப்பொருள் தடுப்பு வழக்கில் கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உட்பட 16 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள்போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் நைஜீரியா நாட்டை சேர்ந்த தாமஸ்(31) பிரபலங்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. கடந்தசனிக்கிழமை அவரை கைது செய்தபோலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் நேற்று பெங்களூருவில் உள்ள கன்னட நடிகை சோனியா அகர்வாலின் வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில் 40 கிராம் கஞ்சா, 12 மது பாட்டில்கள் சிக்கின. இதே போல தொழிலதிபர் பரத், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வசனா சின்னப்பா ஆகியோரின் வீடுகளின் நடத்திய சோதனையிலும் கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் போலீஸார் கன்னட நடிகை சோனியா அகர்வால், பரத் உள்ளிட்டோரிடம் போதைப் பொருள் விற்பனை, பயன்பாடு, விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றது தொடர்பாக விசாரணை நடத்தினர். அவர்களின் செல்போன், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவற்றில் உள்ள தகவல்களை ஆராய்ந்து வருகின்றனர்.
மூன்று பேரின் வீடுகளின் போதைப் பொருள் சிக்கியதால், போதை பொருள் பயன்படுத்தியது தொடர்பான வழக்குப்பதிவு செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர். மேலும் அவர்களை, விரைவில்கைது செய்யவும் திட்டமிட்டுள்ள தாக குற்றப் பிரிவு போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.
தமிழ் நடிகை அல்ல
தமிழிலும் சோனியா அகர்வால்என்ற பெயரில் நடிகை இருக்கிறார். இவரும் கன்னடத்தில் தான் முதலில் அறிமுகமானார். ஒரே பெயரைக் கொண்ட நடிகை சிக்கியதால், நேற்று காலை கன்னட ஊடகங்களில் குழப்பம் ஏற்பட்டது. அதன்பின்னர்தான் அதே பெயரில் உள்ள கன்னட நடிகை சோனியா அகர்வால் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
ரூ. 21 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
மகாராஷ்டிராவில் இருந்து பெங்களூரு வழியாக ஆந்திராவுக்கு காய்கறி லாரியில் கடத்தப்பட்ட 3400 கிலோ எடையுள்ள கஞ்சாவை போதைப் பொருள் தடுப்புத்துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 21 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்த அதிகாரிகள், லாரியை பறிமுதல் செய்துள்ளனர்.