இந்தியா

ராமர் இல்லாமல் அயோத்யாவுக்கு பெருமை ஒன்றுமில்லை: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

செய்திப்பிரிவு

ராமர் இல்லாமல் அயோத்யாவுக்கு பெருமை ஒன்றுமில்லை என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவியிலின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அயோத்தி ராம் கதா பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ராமாயண மேளாவை தொடங்கி வைத்தார். பின்னர் அனுமன் கோயில், ராமர் கோயிலில் தனது மனைவி சவீதா கோவிந்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.

ராமாயண மேளாவை தொடங்கி வைத்துப் பேசிய அவர், என் குடும்பத்தார் பெயர் வைத்தபோது, ராம காதம் அல்லது பகவான் ராமர் மீதான பக்தி மரியாதை நிமித்தமாக எனக்கு இந்தப் பெயரை சூட்டியிருப்பார்கள் என நான் நம்புகிறேன். ராமர் இல்லாமல் அயோத்யாவுக்கு பெருமை ஒன்றுமில்லை. ராமர் இருக்கும் இடத்தில் அயோத்யா இருக்கிறது. அவ்வளவே. ராமர் இந்த இடத்தில் நிரந்தரமாக இருக்கிறார். அதனால் தான் இதற்குப் பெயர் அயோத்யா. அயோத்யா என்றால் போர் தொடுக்க இயலாத என்று அர்த்தம்.

ரகுவம்ச அரசர்களான ரகு, திலீப், ஆஜ், தசரதர், ராமர் ஆகியோர் இந்த பூமியை யாரும் ஆட்கொள்ளாமல் பார்த்துக் கொண்டனர். அதனால் அயோத்யா எனும் பெயர் இந்த இடத்துக்குப் பொருத்தமானது.

ராமர் வனவாசம் சென்றபோது அவர் பழங்குடியின மக்களுடன் நட்பில் இருந்தார். இலங்கைப் போருக்கு அவர் அயோத்யாவிலிருந்தோ மிதிலையில் இருந்தோ படைகளைத் திரட்டவில்லை. கோல், பீல், வானர் என பழங்குடிகளில் இருந்தே படையைத் திரட்டினார். ஏன் ஜடாயு என்ற வல்லூறைக் கூட உதவிக்கு அழைத்தார். அவர் பழங்குடிகளுடன் தனது அன்பையும், நட்பையும் வலுப்படுத்தினார்.

இவ்வாறு குடியரசுத் தலைவர் பேசினார்.

SCROLL FOR NEXT