75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் டிஜிட்டல் போஸ்டரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உருவப்படம் தவிர்க்கப்பட்டதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் காட்டமாக கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு:
நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில் விடுதலையின் அம்ரித் மகோத்சவம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் டிஜிட்டல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த முதல் போஸ்டரில் நேருவின் உருவப்படம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஐசிஎச்ஆர் (ICHR) எனப்படும் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள இந்த டிஜிட்டல் போஸ்டர் அதிர்ச்சியளிக்கிறது.
இது தான் முதல் போஸ்டர். ஆனால் அந்த போஸ்டரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் புகைப்படம் இடம்பெறவில்லை. ஐசிஎச்ஆரின் உறுப்பினர் செயலர் வெறுப்புக்கும், முன்முடிவுக்கும் படிந்துவிட்டார்.
காரைக் கொண்டாடும்போது ஹென்ரிஃபோர்டை நினைவுகூராமல் இருக்க முடியுமா? விமானத்தைக் கொண்டாடும் போது ரைட் சகோதரர்கள் தானே முதலில் மரியாதை செய்யப்பட வேண்டும். இந்திய அறிவியலைக் கொண்டாடும் போது எப்படி சி.வி.ராமனை நாம் மறப்போம். ஆனால், நாட்டின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது ஜவஹர்லால் நேருவை எப்படி மறந்தனர்.
இவ்விவகாரத்தில் ஐசிஎச்ஆர் விளக்கங்கள் ஏற்புடையதாக இல்லை.
இவ்வாறு ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.