சம்ஸ்கிருதம் அறிவை வளர்க்கவும்; தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும் உதவுகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் மன் கி பாத் நிகழ்ச்சி எனும் நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று மன் கி பாத் 80 வது நிகழ்ச்சி நடந்தது.
அதில் பிரதமர் பேசியதாவது:
சம்ஸ்கிருத மொழி இலக்கியங்கள் மிகவும் செழுமையானவை. சம்ஸ்கிருத மொழி அறிவை வளர்க்கவும், தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும் உதவுகிறது. ஆன்மிகமும், மனிதாபிமானமும் ததும்பும் சம்ஸ்கிருத இலக்கியம் யாரையும் தன் வசம் ஈர்க்கக் கூடியது.
சமீப காலமாக சம்ஸ்கிருதம் மீதான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
எனக்குத் தெரிந்த அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ருட்ஜெர் சம்ஸ்கிருத அறிஞர். அவர் அங்குள்ள குழந்தைகளுக்கு சம்ஸ்கிருதம் பயிற்றுவிக்கிறார். அதுபோல் தாய்லாந்தில் டாக்டர் சிராபட் சம்ஸ்கிருதம் பயிற்றுவிக்கிறார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், சிட்னி சம்ஸ்கிருத பள்ளியில் மாணவர்களுக்கு சம்ஸ்கிருதம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதேபோல் உள்நாட்டிலும், சம்ஸ்கிருதம் கற்பிப்பதில் சிறந்து விளங்குபவரைத் தெரிந்தால் சமூகவலைதளங்கள் மூலம் அவர்களைப் பிரபலப் படுத்துங்கள்.
நமது கலாச்சாரத்தை, பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. நாம் கடைபிடிக்கும் கலாச்சாரத்தை நம் சந்ததியினருக்குக் கடத்த வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், "விண்வெளி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய இளைஞர்கள் கால் பதித்துள்ளனர். புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி வருகின்றனர்.
விளையாட்டுத் துறையிலும் இந்திய இளைஞர்கள் ஆர்வம் அதிகரித்துள்ளது. பெற்றோர் தங்கள் குழந்தைகள் விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் காட்டுவதை ஊக்குவிக்கின்றனர். இந்தியா முழுக்க விளையாட்டு போட்டிகள் மீதான ஆர்வம் அதிகரித்து ள்ளது. வரும் காலத்தில் போட்டிகள் மீதான ஆர்வம் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்" என்றார்.