நாட்டில் கரோனா வைரஸ் சற்று அதிகரித்து வரும் நிலையில், ‘கோவிட்-19’ பரவலை தடுக்கும் வழிகாட்டி நெறிமுறைகளை அடுத்த மாதம் 30-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. மேலும், கரோனா பரவலை தடுக்க மாநிலங்கள் 5 அம்சங்களை கடைபிடிக்க அறிவுறுத்தி உள்ளது.
இந்தியாவில் கரோனா பரவல் 2-வது அலையின் போது பாதிப்பு அதிகமாகக் காணப்பட்டது. ஆனால், தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கி விட்டது, முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் எடுத்தது என மத்திய, மாநில அரசுகளின் தீவிர முயற்சியால் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. எனினும், நாடு முழுவதும் கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகள் தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில், கேரளா உட்பட சில மாநிலங்களில் கரோனா பரவல் தற்போது அதிகரித்துள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா நேற்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் கரோனா பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் உள் ளது. எனினும், சில மாநிலங்களில் உள்ளூர் அளவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சில மாவட்டங்களில் தினசரி கரோனா தொற்று அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. எனவே, கரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகள் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
மேலும், உள்ளூர் அளவில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களை தனிமைப்படுத்தி, தொற்று பரவலை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கட்டுப் படுத்த வேண்டும். தேவைப்பட்டால் உள்ளூர் அளவில் தடைகள் விதிக்க வேண்டும். கரோனா பாதிப்புக்கான அறிகுறிகளை முன் கூட்டியே கண்டறிந்து தேவையான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முகக் கவசம் அணிவது, கைகளை கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கழுவுவது போன்ற முன்னெச்சரிக்கைகளை மக்கள் பின்பற்றுவதை தொடர்ந்து கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும், கரோனா பரிசோதனை - பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல் - சிகிச்சை அளித்தல் - தடுப்பூசி
போடுவதை உறுதி செய்தல் -கோவிட்-19 முன்னெச்சரிக்கை களை தவறா மல் கடைபிடித்தல் ஆகிய 5 அம்சங்களை நடை முறைப்படுத்த மாநிலங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு விழாக்கள் வருகின்றன. அந்த நேரத்தில் மக்கள் கூட்டம் கூடுவதைத் தடுக்க வேண்டும். ஆயிரக்கணக்கில் மக்கள் கூடாமல் இருக்க மாநிலங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் உள்ளூர் தடை விதிக்க வேண்டும். கூட்டத்தை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மாநிலங்கள் கட்டாயம் எடுக்க வேண்டும்.
இவ்வாறு மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா கூறி யுள்ளார். -பிடிஐ