மாணவர்களை பாதுகாக்க புதிய சட்டம் கொண்டுவர வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
ஹைதராபாத் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை, ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவர் கண்ணய்யா குமாரை தேச துரோக வழக்கில் கைது செய்தது ஆகிய விவகாரங்களில் நீதி கேட்டு, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று மாணவர்கள் பேரணி நடத்தினர்.
இந்த பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தால், அவர்களின் குரல் மத்திய அரசால் நசுக்கப்படுகிறது.
இளைஞர்கள் மட்டுமல்லாது, ஆதிவாசிகள், தலித் உள்ளிட்ட நலிவடைந்த பிரிவினரையும் மத்திய அரசு ஒடுக்க முயற்சி செய்கிறது. குடியரசுத்தலைவரின் உரையில் ரோகித் தற்கொலை, ஜேஎன்யூ விவகாரம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
கல்லூரிகள் மற்றும் பல் கலைகழகங்களில் மாணவர்களின் குரல் ஒடுக்கப்படுவதைத் தடுக்கவும் அவர்களை பாதுகாக்கவும் புதிதாக ஒரு சட்டம் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.