இந்தியா

மோடி பிரதமராக முடியாது, டீ விற்கலாம்: காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் தாக்கு

செய்திப்பிரிவு

பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி பிரதமராக முடியாது. காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் வந்து டீ விற்கலாம், அதற்கு வேண்டுமானால் இடம் ஒதுக்கித் தருகிறோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.

தில்லியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் மணி சங்கர் அய்யர் இவ்வாறு பேசினார்.

தான் மிகவும் எளிமையான குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவன் என்று மோடி கூறியுள்ளதை கிண்டல் செய்யும் விதமாக அய்யர் இவ்வாறு பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவும் இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது. முன்பு டீ விற்பனை செய்துவந்த ஒருவர் இந்தியாவில் ஆண்டாண்டு காலமாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஒரு குடும்ப வாரிசை (ராகுல் காந்தி) வீழ்த்தினார் என்பதை இந்திய ஜனநாயகம் நிரூபிக்கும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி டுவிட்டர் இணையதளத்தில் கூறியுள்ளார்.

தனது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த மணி சங்கர் அய்யர், மோடி குறித்து நான் பேசியதற்காக மன்னிப்பு கேட்கப் போவதில்லை. எதற்காக நான் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

தங்கள் குடும்பம் டீக்கடை வைத்திருந்த பின்னணியைக் கொண்டது என்று மோடிதான் கூறியுள்ளார். எனவேதான் அவர் பிரதமராக முடியாது, வேண்டுமானால் டீக்கடை வைக்க அனுமதிக்கிறோம் என்று பேசினேன். இதில் தவறு ஏதுமில்லை என்று மணி சங்கர் அய்யர் விளக்கமளித்தார்.

மணி சங்கர் அய்யர் கீழ்த்தரமான சிந்தனைகளின் ஒட்டுமொத்த உருவமாகி விட்டார். மோடியை பிரதமராக்க வேண்டுமென்று அவரிடம் நாங்கள் கேட்கவும் இல்லை. அவரது வாக்கை அளிக்க வேண்டுமென்றுகூட பாஜக கேட்கவில்லை.

விரைவில் நடைபெறவுள்ள மக்கள வைத் தேர்தலில் மக்கள் உரிய பதிலை அளிப்பார்கள் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT