இந்தியா

அசாம் மாநிலத்தில் லாரிகளை வழிமறித்து தீவிரவாதிகள் தாக்கியதில் 5 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

அசாமின் லங்கா என்ற இடத்தில் உள்ள சிமென்ட் ஆலைக்கு நிலக்கரி மற்றும் பிற பொருட்களை ஏற்றிக்கொண்டு 7 லாரிகள், மேகாலயா மாநிலத்தின் உம்ராங்சு என்ற இடத்திலிருந்து வந்து கொண்டிருந்தன. அசாமின் டிமா ஹசாவோ மாவட்டத்தில் உள்ள ரங்கர்பீல் என்ற இடத்தில் லாரிகளை வழிமறித்து அதில் இருந்தவர்கள் மீது தீவிரவாதிகள் நேற்று முன்தினம் இரவு கண்மூடித்தனமாக சுட்டனர். பிறகு லாரிகளுக்கு தீவைத்து விட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர்.

இந்த சம்பவத்தில் லாரி டிரைவர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் என 5 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயம் அடைந்தார். அசாமில் கடந்த மே மாதம் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் திமாசா தேசிய விடுதலைப் படை (டிஎன்எல்ஏ) தீவிரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்த தாக்குதலை டிஎன்எல்ஏ நடத்தியிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். தப்பியோடிய தீவிரவாதிகளை தேடும் பணியில் அசாம் ரைபில்ஸ் மற்றும் சிஆர்பிஎப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த காலத்தில் டிமா ஹசாவோ மாவட்டம் தீவிரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2 முக்கிய குழுக்கள் சரண் அடைந்ததை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக அமைதி நிலவி வந்தது.

SCROLL FOR NEXT