இந்தியா

ஃப்ரீடம் 251: நிதி ஆதாரங்கள் குறித்து அமலாக்க இயக்குனரக விசாரணை தொடக்கம்

பிடிஐ

ரூ.251-க்கு மலிவு விலையில் ஸ்மார்ட் போன் வழங்குவதாக அறிவித்த ரிங்கிங் பெல்ஸ் என்ற மொபைல் போன் தயாரிப்பு நிறுவனத்தின் நிதி ஆதாரங்கள் குறித்த விசாரணையை அமலாக்க இயக்குனரகம் தொடங்கியுள்ளது.

ரூ.251 என்ற ஆகக் குறைந்த மலிவு விலையில் ஸ்மார்ட் போன் வழங்க முடியுமா என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் வருமான வரித்துறையினரும் ரிங்கிங் பெல்ஸின் நிதி ஆதாரங்கள் பற்றி ஆய்வு செய்ய ஆவணங்களைப் பெற்றுள்ளது.

ரிங்கிங் பெல்ஸ் மற்றும் அதன் புரமோட்டர்களின் வங்கிக் கணக்குகள், நிதிநடவடிக்கைகள் குறித்து அமலாக்க இயக்குனரகம் விசாரிக்கும் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் நிறுவனத்திற்கோ அதன் ப்ரமோட்டர்களுக்கோ நோட்டீஸோ, சம்மனோ எதுவும் அனுப்பப்படவில்லை.

தொழிற்துறை சார்ந்த அமைப்பின் உறுப்பினர்களும் இந்த விவகாரத்தை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று தொலைத் தொடர்பு அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து உத்திரப் பிரதேச அரசு இந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்யுமாறு தொலைத் தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது.

இதுவரை ரூ.251 ஸ்மார்ட் போனுக்காக 6 கோடி பேர் பதிவு செய்துள்ளதாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT