கேரளாவில் 3வது நாளாக கரோனா தொற்று எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது.
கேரளாவில் அண்மைகாலமாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கிருந்து மக்கள் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் கரோனாவை கட்டுப்படுத்த மத்திய குழு அங்கு சென்று ஆய்வு நடத்தியது. கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என கேரள அரசுக்கு மத்திய குழு பரிந்துரைத்துள்ளது.
இந்தநிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகையை ஒட்டி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு 3-வது நாளாக இன்றும் கரோனா தொற்று எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து உள்ளது.
கேரளவில் இன்று ஒரே நாளில் 32,801 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தம் 1,70,703 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 32,801 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அங்கு ஒரே நாளில் கரோனாவால் 179 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,313 ஆக உயர்ந்துள்ளது.
18,573பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மாநிலத்தில் பாஸிடிவிட்டி விகிதம் 19.22% ஆக உள்ளது.
சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1,95,254 ஆக அதிகரித்துள்ளது.