மைசூருவில் காதலனைத் தாக்கிய மர்ம கும்பல், கல்லூரி மாணவியை தூக்கிச் சென்று கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி மைசூருவில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்து வருகிறார். அவர் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 7.30 மணியளவில் தன் ஆண் நண்பருடன் சாமுண்டி மலை அடிவாரத்தில் காரில் அமர்ந்தவாறு பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் மாணவியின் ஆண் நண்பரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதனால் அவர் மயங்கிய நிலையில், அந்தக் கும்பல் மாணவியை மறைவான பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் ஆண் நண்பர் மாணவியை மீட்டு மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் ஆலனஹள்ளி காவல்நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இதுகுறித்து மைசூரு மாநகர காவல் ஆணையர் சந்திரகுப்தா கூறுகையில், ''முதல்கட்ட விசாரணையில் மாணவி கூட்டு பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த மாணவியின் ஆண் நண்பரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் சம்பவ இடத்துக்கு தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் காரணமாக மாணவி கடும் அதிர்ச்சியில் இருப்பதால், அவரிடம் வாக்குமூலம் பெறப்படவில்லை''என்றார்.
இந்த கூட்டு பலாத்காரத்தை கண்டித்து மைசூருவில் ஏபிவிபி, இடதுசாரி மாணவ அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மைசூரு ரயில் நிலையம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்ட மகளிர் அமைப்பினர்,
குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை வழங்குமாறு கோரினர். இதனிடையே தேசிய மகளிர் ஆணையம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கர்நாடக அரசு தேவையான உதவிகளையும், உளவியல் ரீதியான ஆலோசனை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளது.