அடுத்த நிதியாண்டில் ரயில் நிலையங்களில் 30,000 பயோ-டாய்லட்களை உருவாக்கும் திட்டம் பற்றிய இலக்கை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நிர்ணயித்தார்.
இது பற்றி அவர் தனது பட்ஜெட் உரையில் கூறியதாவது:
ரயில்வே நிலையங்களிலும் ரயில்வண்டிகளிலும் தூய்மையை மேம்படுத்த தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 'எனது பெட்டியை சுத்தம் செய்க' என்ற சேவையானது அகில இந்திய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எஸ்.எம்.எஸ். மூலம் ஒரு பயணி தான் பயணம் செய்யும் ரயில் பெட்டி அல்லது கழிவறையை சுத்தம் செய்யுமாறு கோரலாம்.
பயணிகளின் கருத்துக்கள் மூலம் ஏஒன், ஏ ஆகிய வகையில் ரயில்வே நிலையங்கள் தர வரிசைப் படுத்தப்படுகின்றன. படிப்படியாக ஏ1 தரவரிசை பெற்ற ரயில்வே நிலையங்களில் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான மையங்கள் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அடுத்த நிதியாண்டில் 30,000 உயிரி-கழிவறைகள் (பயோ-டாய்லெட்கள்) செயல்படுத்துவது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ரயில் நிலையங்கள், நிலையத்திற்கு வரும் சாலைகள், அருகில் உள்ள காலனிகள் ஆகியவற்றில் தூய்மை நிலையை மேம்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளப்படும்.
முதியோர், உடற்குறைபாடு உள்ளவர்கள், பெண்கள் ஆகியோரின் தேவைகளுக்காக குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் உயிரி-கழிவறைகள் நடைமேடைகளில் அமைக்கப்படும்.
விளம்பர உரிமைகள், நிறுவனங்களின் சமூகப் பொறுப்புகளின் அடிப்படையிலான ஆதரவு ஏற்பாடுகள் போன்றவற்றின் மூலம் இந்த கழிவறைகளை வழங்கவும், அவற்றை நிர்வகிக்கவும் புதுமையான வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.