ஜெகன் மோகன் ரெட்டி 
இந்தியா

செப்டம்பர் 15-ம் தேதி ஜாமீன் மீது தீர்ப்பு வெளியாக வாய்ப்பு; ஜெகன்மோகன் ரெட்டியே முதல்வராக நீடிப்பாரா?- ஆந்திர மாநிலத்தில் அரசியல் பரபரப்பு

என்.மகேஷ்குமார்

சொத்துக்குவிப்பு வழக்கில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அவரது கட்சி எம்.பி. விஜய்சாய் ரெட்டி ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனு மீதான தீர்ப்பை செப்டம்பர் 15-ம் தேதிக்கு சிபிஐ நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளிவைத்தது.

தற்போது ஆந்திர முதல்வராக இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி மீது கடந்த 2010-ல் சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு பின்னர் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்கில் ஜெகன் முதல் குற்றவாளியாகவும் அவரது கட்சியின் தற்போதைய எம்.பி. விஜய்சாய் ரெட்டி 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை ஹைதராபாத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை தொடர்ந்து, ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம், முதல்வராக பதவியேற்றார்.

இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெகன், விஜய் சாய் ரெட்டி ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி, ஹைதராபாத் சிபிஐ நீதிமன்றத்தில் ஜெகன் கட்சியின் அதிருப்தி எம்.பி. ரகுராம் கிருஷ்ணம்ம ராஜு மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், "ஜெகன், விஜய்சாய் ஆகிய இருவரும் ஜாமீன் நிபந்தனைகளை மீறுகின்றனர். சாட்சிகளை கலைக்க முயற்சிக்கின்றனர்" என குற்றம் சாட்டியிருந்தார். இதில் ஜெகனுக்கு எதிரான வழக்கில் இரு தரப்பு விவாதம் கடந்த ஜூலை மாதம் முடிவடைந்தது. விஜய் சாய்க்கு எதிரான வழக்கில் இரு தரப்பு விவாதம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதையடுத்து இரு வழக்குகளிலும் வரும் செப்டம்பர் 15-ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக சிபிஐ நீதிமன்றம் அறிவித்தது.

முன்னதாக ஜெகனுக்கு எதிரான வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஜெகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நீதிமன்றம் ரத்து செய்தால், அவர் மீண்டும் சிறை செல்ல நேரிடலாம் என்பதால் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் நேற்று முன்தினம் பரபரப்பு நிலவியது.

இந்த வழக்கின் தீர்ப்பு தொடர் பாக ஜெகனின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மத்தி யில் கோடிக்கணக்கான ரூபாய் நேற்று முன்தினம் பந்தயமாக கட்டப்பட்டது. மாநிலம் முழு வதிலும் இது தொடர்பாக சூதாட்டங்கள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செப்டம்பர் 15-ல் ஜெகனின் ஜாமீன் ரத்து செய்யப் பட்டு, சிறை செல்ல நேரிட்டால் முதல்வர் பதவி யாருக்கு? அவரது மனைவி பாரதிக்கா அல்லது கட்சித் தலைவர்களில் ஒருவருக்கா என்பது தொடர்பான விவாதமும் இப்போதே தொடங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT