மகாராஷ்டிர சட்டப்பேரவையில் சிவ சேனையின் காவிக் கொடி பறக்க வேண்டும் என்றும், பால் தாக்கரேவின் ஆசையை நிறைவேற்ற சிவ சேனை தொண்டர்கள் தயாராக வேண்டும் என்றும் அக்கட்சியின் தலைவர் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சிவ சேனையின் 18 வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, அக்கட்சி சார்பில் மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் நேற்று வெற்றிக் கொண்டாட்ட வீதி உலா நடத்தப்பட்டது.
அதில் தலைமையேற்ற சிவ சேனை தலைவர் உத்தவ் தாக்கரே பேசும்போது, "அடுத்தக் கட்டமாக நமது இலக்கு, மகாராஷ்ட்ர சட்டப்பேரவைதான். சிவ சேனையின் காவிக் கொடி அதன் உச்சியில் பறக்க வேண்டும். நமது தலைவர் பால் தாக்கரேவின் கனவு நினைவாக வேண்டும். இதற்காக நாம் தயாராக வேண்டும்.
நாட்டின் முதன்மை மாநிலமாக மகாராஷ்டிரம் மாற வேண்டும். மும்பையை உலகளாவிய நகராக மாற்ற வேண்டும். மும்பையின் குடிசைப் பகுதிகளையும் உள்கட்டமைப்பு திட்டங்கள் மூலம் மேம்படுத்த வேண்டும்" என்றார் உத்தவ் தாக்கரே.
உத்தவ் தாக்கரே தனது வெற்றி உரையின்போது பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிட்டு எதுவும் பேசவில்லை. மேலும், மகாராஷ்டிர தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மை கிடைத்தால் முதல்வர் ஆவேன் என்று நவ நிர்மான் சேனைத் தலைவர் ராஜ் தாக்கரே குறிப்பிட்டது குறித்தும் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
அடுத்த நான்கு மாதத்தில், மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நவ நிர்மான் சேனைத் தலைவர் ராஜ் தாக்கரே, தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அவரை தொடர்ந்து, உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர சட்டப்பேரவைக்குக் குறிவைத்து பேசியுள்ளது கவனிக்கத்தக்கது.