காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி | படம் உதவி ட்விட்டர் 
இந்தியா

கரோனா கவனம்; விற்பனையில் தீவிரம்: மத்திய அரசு மீது ராகுல் காந்தி விமர்சனம்

பிடிஐ

நாட்டில் கரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருவதால், மக்கள் தங்களைத் தாங்களே கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும், மத்திய அரசு சொத்துக்களை விற்பதில் தீவிரமாக இருக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மத்திய அரசின் சொத்துக்களை விற்பனை செய்து பணமாக்கும் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இதைக் குறிப்பிட்டும், தடுப்பூசித் திட்டத்தை விரிவுபடுத்தாமல் மத்திய அரசு சொத்துக்களை விற்பனை செய்வதில் ஆர்வமாக இருப்பதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ நாட்டில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. அடுத்த கரோனா அலையில் மோசமான விளைவுகள் ஏற்படாமல் தவிர்க்க தடுப்பூசித் திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும்.

கடந்த 70 ஆண்டுகளாக சேர்த்த தேசத்தின் சொத்துக்களை விற்பனை செய்வதில் மத்திய அ ரசு தீவிரமாக இருக்கிறது. ஆதலால் மக்கள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதிவிட்ட கருத்தில் “ கடந்த 70 ஆண்டுகளாக இந்தியர்கள் எதை கடினமாக உழைத்து உருவாக்கினார்களோ அதை தனது 7 நண்பர்களுக்கு அவர் அன்பளிப்பாக அளித்து வருகிறார்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ராகுல் காந்தி 3 வகையான படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் “ அவர் வந்தார், அவர் பார்த்தார், அவர் விற்றார்” என எழுதப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT