நாடு முழுவதும் கடந்த 6 ஆண்டுகளில் 474 யானைகள் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந் துள்ளதாக மத்திய அரசு தெரிவித் துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் கே.கோவிந்தன் நம்பூதிரி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் கேட்டிருந்த கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில், “கடந்த 2014 முதல் 2020-ம் ஆண்டு வரையிலான காலத்தில் நாடு முழுவதும் 474 யானைகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளன. இதில் அதிக அளவாக 2018-ல் மட்டும் 81 யானைகள் உயிரிழந்தன. கடந்த 6 ஆண்டுகளில் மாநில அளவில் அதிகபட்சமாக அசாமில் 90, ஒடிசாவில் 73, தமிழ்நாட்டில் 68, கர்நாடகாவில் 65, கேரளாவில் 24 யானைகள் உயிரிழந்துள்ளன” என கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் விவசாய நிலங்களைச் சுற்றி சட்டவிரோதமாக மின் வேலியை பொருத்துகின்றனர். இதுபோன்ற மின்சார வேலியில் சிக்கியே பெரும்பாலான யானைகள் உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.