உத்ராகண்டில் செயல்பட்டு வரும் கல்வாலியா இஸ்பத் உத்யோக் என்ற தனியார் நிறுவனம் ரூ.8 கோடி அளவுக்கு ஜிஎஸ்டியில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக மத்திய ஜிஎஸ்டி ஆணைய அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய ஜிஎஸ்டி ஆணைய அலுவலக அதிகாரிகள் உத்தரபிரதேசம், உத்ராகண்ட், ஜார்க்கண்ட் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களிலும், நிறுவனத்தின் இயக்குநர்கள் யோகேஷ் குமார் ஜிண்டால், அக்ஷய் ஜிண்டால் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களிலும் தேடுதல் வேட்டை நிகழ்த்தியுள்ளனர்.
இதுகுறித்து டேராடூன் மத்தியஜிஎஸ்டி ஆணையர் தீபங்கர் ஆரோன் கூறியதாவது: இந்நிறுவனத்தின் ஆவணங்களை ஆராய்ந்தபோது பல போலி கொள்முதல் ரசீதுகளைப் பயன்படுத்தி முறைகேடாக உள்ளீட்டு வரியைத் திரும்பப் பெற்று வந்துள்ளது உறுதியானது. ஏனெனில் அந்த ரசீதுகளில் குறிப்பிட்டிருந்த நிறுவனங்கள் போலியானவை. ரசீதுகளில் குறிப்பிட்டிருந்த முகவரிகளில் சோதனை நடத்தியபோது அப்படிஎந்த நிறுவனமும் செயல்படவில்லை என்பது தெரிந்தது. சிலநிறுவனங்கள் பொருட்கள் கொள்முதல் செய்யாமலேயே கொள்முதல் ரசீதுகளையும் வழங்கியுள்ளனர். இவ்வாறு தொடர் முறைகேடுகள் மூலமாக பெற்ற உள்ளீட்டு வரியைப் பயன்படுத்தி அந்நிறுவனம் தான் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி வரியைச் செலுத்தி வந்துள்ளது. இவ்வாறாக ரூ.8 கோடி வரை வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் வரி ஏய்ப்புசெய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் இயக்குநர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்நிறுவனத்திடமிருந்து ரூ.5 கோடி வரை மீட்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை நிறுவனத்தின் இயக்குநர்களே முன்வந்து செலுத்தி உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இவ் வாறு அவர் தெரிவித்தார்.- பிடிஐ