ஏழாவது சம்பள கமிஷன் பரிந்து ரைகளை ஏற்றுக்கொள்ள மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் 2014 பிப்ரவரியில் நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையில் 7-வது ஊதிய கமிஷன் நியமிக்கப்பட்டது. இந்த கமிஷன் தனது 900 பக்க பரிந்துரைகளை கடந்த நவம்பர் 19-ல் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் சமர்ப்பித்தது.
இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒட்டுமொத்தமாக 23.55 சதவீத ஊதிய உயர்வு வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. அடிப்படை சம்பளத்தில் 16% அதிகரிக்கவும் படிகளை 63% உயர்த் தவும் ஓய்வூதியத்தை 24% உயர்த் தவும் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18 ஆயிரமாகவும் அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் ஆகவும் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே பரிந்துரைகளில் சில முரண்பாடுகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பாக மத்திய அரசின் கேபினட் செயலாளர் பி.கே. சின்ஹா தலைமையில் குழு அமைக் கப்பட்டது. இந்த குழு பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை கேட் டறிந்தது. அதன்அடிப்படையில் பரிந்துரைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட உள்ளது.
பரிந்துரைகளை ஏற்க முடிவு
இந்நிலையில் 7-வது ஊதிய கமிஷனின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளி யாகி உள்ளன. மத்திய அமைச் சரவை முறைப்படி ஒப்புதல் அளித்தவுடன் கடந்த ஜனவரி 1-ம் தேதியை கணக்கிட்டு அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும். இதன்மூலம் 47 லட்சம் அரசு ஊழியர்களும் 52 லட்சம் ஓய்வூதி யர்களும் பயன் அடைவார்கள்.
ரூ.1.10 லட்சம் கோடி ஒதுக்கீடு
இதனிடையே 7-வது ஊதிய கமிஷன் குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியபோது, 7-வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் மற்றும் ராணுவத்தில் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்துக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.1.10 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.