மத்திய அமைச்சர் நாராயண் ராணேகைது விவகாரத்தை அடுத்து, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தரக்குறைவாக விமர்சித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சரான நாராயண் ராணே, மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட்டில் நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரவுக்கு இந்தியா சுதந்திரம் அடைந்த ஆண்டு கூடதெரியவில்லை. தனது உதவியாளரிடம் அதை கேட்டு தெரிந்துகொள்ளும் நிலையில் தான் அவர்இருக்கிறார். நான் மட்டும் அங்குஇருந்திருந்தால் அவரை அறைந்திருப்பேன்" என கூறினார்.
இவரது இந்த பேச்சு, ஆளுங்கட்சியான சிவசேனா தொண்டர்களை கொதிப்படைய செய்தது. இதுதொடர்பான புகாரின் பேரில், மத்திய அமைச்சர் நாராயண் ராணேவை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர் ஜாமீனில்விடுவிக்கப்பட்டார். இதனிடையே, ஒரு மாநிலத்தின் முதல்வரை நாராயண் ராணே எவ்வாறு தரக்குறைவாக பேசலாம் எனக் கூறி, மகாராஷ்டிராவில் உள்ள பல பாஜக அலுவலகங்கள் சிவசேனா தொண்டர்களால் சூறையாடப்பட்டன.
உத்தவ் தாக்கரே வீடியோ
இந்நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தரக்குறைவாக பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் உத்தவ் தாக்கரே பேசியிருப்பதாவது:
முற்றும் துறந்த துறவி என தன்னைக் கூறிக்கொள்ளும் ஒருவர்,எப்படி அதிகாரம் படைத்த முதல்வர் பதவியில் அமர முடியும்? அப்படி அவர் முதல்வராக பதவியேற்றதற்கு பின்னர், அவர் எப்படி யோகி ஆவார்? துறவி என்றால் அனைத்தையும் துறந்து குகையில் உட்கார வேண்டும். முதல்வர் பதவியில் அமரக் கூடாது. மகாராஷ்டிராவில் மகாராஜா சிவாஜியின் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது, யோகி ஆதித்யநாத் காலணிகளை அணிந்திருக்கிறார். சிவாஜியின் சிலை முன்பு அப்படி நிற்கலாமா? அந்த காலணிகளை வைத்தே அவரை அடிக்கலாம் என எனக்கு தோன்றியது. இவ்வாறு அந்த வீடியோவில் உத்தவ் தாக்கரே பேசியிருக்கிறார்.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை தரக்குறைவாக பேசியதற்காக மத்திய அமைச்சர் நாராயண் ராணே கைது செய்யப்படும்போது, உ.பி. முதல்வரை தரக்குறைவாக பேசிய உத்தவ் தாக்கரே ஏன் கைது செய்யப்படக் கூடாது? என பாஜகவினர் கேள்வியெழுப்புகின்றனர்.
பயப்பட மாட்டேன்
உங்களைக் கண்டு நான் பயப்படவில்லை என்று கைதாகி ஜாமீனில் வந்துள்ள மத்திய அமைச்சர் நாராயண் ராணே, சிவசேனா தலைவர்களுக்கு பதில் அளித்துள்ளார்.
நேற்று நாராயண் ராணே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எனக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் இருந்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசுக்கு எதிராக எனது ஜனஆசீர்வாத் யாத்திரை வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கும். சிவசேனா தலைவர்களைக் கண்டுநான் பயப்படவில்லை. எனக்கு எதிரான வழக்குகளில் மும்பை உயர் நீதிமன்றம் எனக்கு ஆதரவாகவே தீர்ப்புகள் அளித்துள்ளது. நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சிவசேனா தலைமையிலான மகாராஷ்டிரா கூட்டணி அரசுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும். இவ்வாறு நாராயண் ராணே கூறினார்.