சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா 2017ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி முதல் 2021ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி வரை 4 ஆண்டுகள் பெங்களூருவில் உள்ள பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த தண்டனை காலத்தில் சசிகலா சிறையில் இருந்த போது சிறப்பு சலுகை பெற்றதாக புகார் எழுந்தது.
இதை விசாரித்த அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா, சசிகலா சிறப்பு சலுகைகளை பெறுவதற்காக டிஜிபி சத்திய நாராயணராவ், சிறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டினார். 2019-ம் ஆண்டு இதை விசாரித்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு, 'சசிகலா சிறப்பு சலுகைகளை அனுபவித்தது உண்மை' என 245 பக்க அளவில் அறிக்கை அளித்தது.
இதையடுத்து ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள் மற்றும்சிறைத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் முதல்கட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா கடந்த மாதம், சசிகலா மீதான சிறை முறைகேடு வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவிடக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதை ஏற்ற நீதிமன்றம் ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் இறுதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
இதையடுத்து ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சசிகலா மீதான சிறை முறைகேடு வழக்கின் குற்றப்பத்திரிக்கையை சீல் வைத்த உறையில் தாக்கல் செய்தனர். இதை பெற்றுகொண்ட நீதிபதி இவ்வழக்கில், குற்றப்பத்திரிக்கையை பரிசீலித்து, செப்டம்பர் 7ம் தேதி அடுத்தக்கட்ட விசாரணைக்கான வழிகாட்டுதல்களை வழங்குவதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்கு செப்டம்பர் 7ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.