கர்நாடக அரசின் தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான கூடுதல் முதன்மை செயலாளர் ரமணா ரெட்டி பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கர்நாடகாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தவாறு பணியாற்ற அனுமதித்துள்ளன. கரோனா 3வது அலையை எதிர்கொள்வது குறித்து நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. 60 சதவீத நிறுவனங்கள் 50 சதவீதத்துக்கும் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்டு இயங்குகின்றன. இந்நிலையில் பெங்களூருவில் கிருஷ்ணராஜபுரம் சில்க் போர்ட் சாலையில் அடுத்த ஓராண்டுக்கு மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் 19 கிமீ நீளமுள்ள சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டால் ஊழியர்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எனவே நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வரும் 2022ம் ஆண்டு டிசம்பர் வரை வீட்டில் இருந்தவாறு பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என அரசு சார்பில் நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை ஏற்றுக்கொள்வதாக 50 சதவீத நிறுவனங்கள் அரசுக்கு பதில் அனுப்பியுள்ளன. இவ்வாறு ரமணா ரெட்டி தெரிவித்தார்.