ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைபற்றியுள்ளனர். ஆப்கனில் பல்வேறு நகரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். குறிப்பாக காபூலில் 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி இருந்தனர். அங்குள்ள இந்தியா அழைத்து வர தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அவர்களை மீட்பதற்காக இந்திய விமானப்படையின் சி17 விமானம் கொண்டு செல்லப்பட்டது. இந்தியா விமானத்தில் ஏறுவதற்காக வெளியே வந்து சேர்ந்த 150 இந்தியர்களையும் தலிபான்கள் சுற்றி வளைத்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இந்தியர்களை மீட்க தலிபான்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் நேற்று அடுத்தடுத்து இரண்டு விமானங்களில் இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர்.
இந்த விமானத்தில் இந்தியர்கள் அல்லாமல் ஆப்கனைச் சேர்ந்த இந்துக்களும், சீக்கியர்களும் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தனர். இந்தியர்கள் மட்டுமின்றி ஆப்கன் நாட்டைச் சேர்ந்த மக்கள் சிலரும் அடைக்கலம் தேடி அகதிகளாக இந்தியா வந்துள்ளனர்.
ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் காபூலில் இருந்து இந்தியர்கள் அனைவரையும் மீட்டுக் கொண்டு வர இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் சுமார் 45 நிமிடங்கள் தொலைபேசியில் பேசினார். ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து அவர்கள் விரிவாக உரையாடினர்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
ஆப்கானிஸ்தானில் அண்மையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன் விரிவாகவும் பயனுள்ள வகையிலும் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டேன். கோவிட் -19 க்கு எதிரான இந்தியா-ரஷ்யா ஒத்துழைப்பு உட்பட இருதரப்பு விவகாரங்கள் தொடர்பாக நாங்கள் விவாதித்தோம். முக்கியமான விஷயங்கள் தொடர்பாக விரிவான ஆலோசனைகளை வரும் நாட்களிலும் தொடர இருவரும் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.