இந்தியா

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்கள் தாக்கல்

இரா.வினோத்

ஜெயலலிதா சொத்துகுவிப்பு மேல் முறையீட்டு வழக்கு தொடர்பான 166 தொகுதி ஆவணங்கள் நேற்று உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப் பட்டது.

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேரையும் கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.

இதனை எதிர்த்து கர்நாடக அரசு திமுக பொதுச் செயலர் அன்பழகன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய் யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான கர்நாடக அரசின் இறுதிவாதங்கள் கடந்த 3 தினங்களாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் அடங்கிய அமர்வு முன் நடைபெற்று வந்தன. ஜெயலலிதா தரப்பும், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையும் வழக்குக்கு சம்பந்தமான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

விசாரணையில் திருப்பம்

இதற்காக ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் கால அவகாசம் கேட்டிருந்த நிலையில் நேற்று வழக்கு தொடர்பான 166 தொகுதி ஆவணங்களை, 2 தொகுப்புகளாக உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்தனர்.

இதில் வழக்கு சார்ந்த தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரின் குற்றப்பத்திரிக்கை, அரசு தரப்பு சாட்சி பட்டியல், அரசு சான்று ஆவணங்கள், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு நகல், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமியின் தீர்ப்பு நகல் ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளன.

முக்கிய ஆவணங்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின் போக்கில் திருப்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT