‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, உ.பி.யின் ஜான்சிக்கு அருகில் உள்ள ஓர்ச்சா பகுதியில் உள்ள கோட்டை மற்றும் கோயில்களில் நடைபெற்று வருகிறது. கோட்டையில் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் நிற்கும் காட்சிகள் எடுக்கப்பட்டன. 
இந்தியா

ம.பி.யின் கோட்டைகளில் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு: தமிழ்ப்படங்களின் புதிய களமாக மாறும் வட மாநில சுற்றுலா தலங்கள்

ஆர்.ஷபிமுன்னா

கல்கி கிருஷ்ணமூர்த்தியின் சரித்திர நாவல் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ எனும் பெயரிலேயே எடுக்கப்பட்டு வருகிறது. சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 2022-ம் ஆண்டு இப்படம் வெளியாக உள்ளது.

இதன் ஒரு பகுதிக்கான காட்சிகள் புந்தேல்கண்ட் கோட்டைகளில் எடுக்கப்படுகின்றன. ஹைதராபாத் உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களில் இப்படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் கடைசிக் கட்டக் காட்சிகளுக்காக இயக்குநர் மணிரத்னம் தலைமையிலான படக்குழுவினர் கடந்த வாரம் மத்திய பிரதேச மாநிலம் வந்திறங்கினர்.

இப்படத்தில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யாராய் பச்சன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் தமிழ்ப்பட நாயகர்களான விக்ரம், கார்த்தி, பிரகாஷ்ராஜ், நடிகை திரிஷா நடித்த காட்சிகள் மத்திய பிரதேச மாநிலத்தில் எடுக்கப்பட்டு வருகின்றன.

இங்கு கோட்டைகளும், கோயில்களும் அமைந்த ஓர்ச்சா, உத்தரப்பிரதேசத்தின் ஜான்சிக்கு அருகில் அமைந்துள்ளது. ஓர்ச்சாவில் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரம்மாண்டமானக் கோட்டைகளும், கோயில்களும் அமைந்துள்ளன.

ஐஸ்வர்யா பங்கேற்பு

இங்கு கடந்த வெள்ளிக்கிழமை படப்பிடிப்பு தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இதில், கோட்டையின் முன்புறம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 4 இடங்களில் படைகள் அமைந்த காட்சிகள் எடுக்கப்பட்டன. இதற்காக,மும்பையில் இருந்து ஐஸ்வர்யாராய் தனது மகள் ஆராத்யாவுடன் வந்திருந்தார்.

ஓர்ச்சா கோட்டையின் ராஜா மெஹலின் முக்கிய வாசலிலிருந்து குதிரையில் அமர்ந்தபடி தனது படைகள் தொடர விக்ரம் வெளியேறும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அவரை நடிகை ஐஸ்வர்யாராய் வசனங்கள் பேசி வழியினுப்பி வைக்கும் காட்சிகளும் எடுக்கப் பட்டன. ஓர்ச்சாவின் புகழ்பெற்ற லஷ்மிநாராயண் கோயில் முன் பாகவும் தனியாக செட் அமைத்தும் படப்பிடிப்பு நடைபெற்றது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் பொன்னியின் செல்வன் படக்குழு வட்டாரங்கள் கூறும்போது, ‘கடைசியாக ஓர்ச்சா வில், விக்ரமுடன் ஐஸ்வர்யா நடித்த மணிரத்னம் படமான ‘ராவணன்’ காட்சிகளும் இக்கோட்டையில் பதிவாயின. அப்போது ஏதோ சில காரணங்களால் அக்கோட்டையின் முழு அழகையும் படம் எடுக்க முடியாமல் போனது. இதை மனதில் வைத்து மீண்டும் மணி ரத்னம் தனது ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்காக கடந்த 2 வருடங்களாக ஓர்ச்சா வரமுயற்சி செய்தார். இதற்காக ஐஸ்வர்யாராயின் கால்ஷீட் கரோனா உள்ளிட்ட காரணங்களால் தாமதமாகி, தற்போது இந்தப் படம் விரைந்து எடுக்கப்படுகிறது’ என்றன.

இதற்கிடையில் நேற்று முன் தினம் படப்பிடிப்புக்கு இடையே ஐஸ்வர்யாராய் தன் மகளுடன் ஜான்சி கோட்டைக்குச் சென்று பார்வையிட்டார்.

குவாலியரில்...

ஓர்ச்சாவை தொடர்ந்து குவாலியரின் கோட்டைகளில் நேற்றுமுதல் சில காட்சிகள் எடுக் கப்பட்டு வருகின்றன. இதில்,கார்த்தி, பிரகாஷ்ராஜுடன் திரிஷாநடிக்கும் காட்சிகள் படமாக்கப் பட்டன.

இத்திரைப்படத்தினால் ம.பி., உ.பி.யின் வறட்சிப் பகுதியான புந்தேல்கண்டின் சுற்றுலா தலங் கள் புத்துயிர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT